சினிமா செய்திகள்
‘மின்னலே’ படக்கதையை மாற்றி வெற்றிக்கு உதவிய மேடி… சீக்ரெட் பகிர்ந்த கெளதம் மேனன்!

மின்னலே படத்தின் கதையை மாற்றி வெற்றிக்கு உதவியதே நடிகர் மாதவன் தான் என இயக்குநர் கெளதம் மேனன் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் கெளதம் மேனன் மின்னலே திரைப்படத்தை இயக்கி 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதையொட்டி கெளதம் மேனன் பல சுவாரஸ்ய நினைவுகளை பல பேட்டிகளில் தொடர்ந்து பதிவு செய்து வருகிறார். அந்த வகையில் மின்னலே படத்துக்கான வெற்றியைக் கொடுத்தது மாதவன் தான் என்றும் கூறியுள்ளார்.
கெளதம் மேனன் கூறுகையில், “மின்னலே படத்தில் முதலில் என் கதைப்படி மாதவன்- அப்பாஸ் ஆகிய இருவரும் கல்லூரிக் காலத்தில் நல்ல நண்பர்களாக இருந்தவர்கள் என்றும் பின்னால் ரீமா சென் கதாபாத்திரத்துக்காக சண்டை போட்டுக் கொள்வார்கள் என்றும் வைத்து இயக்கினேன்.
ஆனால், மாதவன் தான் கதை இப்படி இருப்பதை விட கல்லூரிக் காலத்திலேயே மாதவன்- அப்பாஸ் கதாபாத்திரங்கள் எதிரிகளாக இருந்ததாகவும் ரீமா சென் காதலுக்குப் போட்டியாக வந்த நிற்கும் போது இருவருக்கும் பகை அதிகரித்துக் காணப்படுவது போலவும் கதையை வைத்துக்கொள்ளலாம் எனக் கூறினார்.
அந்தப் படத்தின் வெற்றியே மாதவனால்தான். அவர் கதையை அப்படி மாற்றியதாலே தான் மின்னலே இன்றும் வெற்றிப்படமாக மக்கள் மனதில் நிலைத்து நிற்கிறது” எனக் கூறியுள்ளார்.














