உலகம்
இன்றைய வேலைநீக்க செய்தி: 15% ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பிய முன்னணி நிறுவனம்..!

உலகின் முன்னணி நிறுவனங்களின் வேலை நீக்க செய்திகள் தினந்தோறும் வந்து கொண்டிருக்கின்றன என்பதும் தினம் தோறும் நூற்றுக்கணக்கான அல்லது ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வேலை இழந்து வருகின்றனர் என்பதையும் பார்த்தோம். நேற்று அக்சென்சர் என்ற நிறுவனம் 19 ஆயிரம் ஊழியர்களை வேலை நீக்கம் செய்வதாக அறிவித்தது ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இன்று முன்னணி நிறுவனம் ஒன்று 15 சதவீத ஊழியர்களை வேலை நீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது.
சான்பிரான்சிஸ்கோ என்ற பகுதியில் உள்ள கிளாஸ்டோர் என்ற நிறுவனம் தனது பணியாளர்களை 15 சதவீதம் குறைக்க போவதாகவும் இதனால் 140 பணியாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது. கடினமான பொருளாதார சூழ்நிலை, லாப குறைவு மற்றும் பண வீக்கம் காரணமாக ஊழியர்களை குறைக்க முடிவு செய்திருப்பதாகவும் பணி நீக்க முயற்சி என்பது நாங்கள் எடுக்கும் கடைசி கட்ட முயற்சி என்றும் கூறியுள்ளது.
ஊழியர்களை பணி நீக்கம் செய்வதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை என்றும் ஆனால் துரதிஷ்டவசமாக இந்த முடிவை எடுக்க வேண்டிய நிலைக்கு வந்துள்ளோம் என்றும் பணியாளர்களை குறைக்கும் கடினமான முடிவை கனத்த இதயத்துடன் எடுத்திருக்கிறேன் என்றும் இந்த நிறுவனத்தின் சிஇஓ அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார். கிளாஸ் டோர் குழுவில் உள்ள 15 சதவீத ஊழியர்கள் வேலை நீக்கம் செய்யப்படுவதால் 140 சக ஊழியர்களிடம் நாங்கள் இன்று விடை பெற்று கொள்கிறோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார் .
மேலும் பணிநீக்க நடவடிக்கை மட்டும் இன்றி மேலும் சில செலவுகளை குறைக்க திட்டமிட்டுள்ளோம் என்றும் அது குறித்த அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகும் என்றும் அதன் தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் 16 வார அடிப்படை சம்பளம் மற்றும் 4 மாதங்களுக்கு மருத்துவ காப்பீடு ஆகியவை வழங்கப்படும் என்றும் கிளாஸ்டோர் நிறுவனம் தெரிவித்துள்ளது.