உலகம்
வேலை தேடித்தரும் நிறுவனத்திலேயே வேலைநீக்க நடவடிக்கை.. 2200 ஊழியர்களின் வேலை காலி..!

உலகளாவிய வேலை வாய்ப்பு இணையதளங்களில் ஒன்றான Indeed என்ற இணையதளத்தில் பணிபுரியும் 2200 ஊழியர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலை இல்லாத இளைஞர்கள் பலர் Indeed இணையதளம் சென்று தான் வேலை வாய்ப்புகளை பெறுவார்கள் என்றும் அந்த அளவுக்கு நம்பகத்தன்மை உடைய நிறுவனமாக Indeed இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த நிறுவனத்தின் சி.இ.ஓ வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் எங்கள் நிறுவனத்தில் ஆட்குறைப்பு நடவடிக்கையை மிகுந்த கனத்த இதயத்துடன் எடுக்க முடிவு செய்துள்ளேன் என்றும் இதனால் நான் மனம் உடைந்தேன் என்றும் தெரிவித்துள்ளார். மக்களுக்கு வேலை கிடைக்க உதவுவதை நோக்கமாக கொண்ட எங்கள் நிறுவனத்திலேயே வேலை நீக்க நடவடிக்கை எடுப்பது என்பது மிகவும் கடினமானது என்றும் நிதி மற்றும் பொருளாதார சிக்கல் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கிறோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
யாரை வேலையில் இருந்து நீக்குவது என்பது குறித்த கடினமான முடிவை நாங்கள் எடுத்து உள்ளோம் என்றும் எதிர்காலத்தில் இது போன்ற முடிவை எடுப்பதற்கு முன் மிகுந்த ஆலோசனை செய்வோம் என்றும் தெரிவித்துள்ளார். இந்த நிறுவனத்தில் பணிபுரியும் 2200 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் அனைவருக்கும் ஈமெயில் மூலம் தகவல் அனுப்பப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.
பணி நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு 16 வார அடிப்படை சம்பளம் வழங்கப்படும் என்றும் மேலும் சில சலுகைகள் வழங்கப்படும் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன. கடந்த ஆண்டு நடந்த கூட்டம் ஒன்றில் சில முக்கிய தகவல்களை பகிர்ந்து கொண்ட Indeed சிஇஓ ‘கொரோனா காலத்திற்கு பிறகு நிறுவனம் ஏற்றத்திற்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டதாகவும் ஆனால் மிகப் பெரிய அளவில் வருமானம் குறைந்தது என்றும் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் மொத்த வேலை வாய்ப்புகள் ஆண்டுக்கு ஆண்டு 3.5 சதவீதம் குறைந்து கொண்டே வருகிறது என்றும் கொரோனா தொற்றுக்கு பிறகு எங்கள் நிறுவனம் லாபத்தை நோக்கி செல்வதில் திணறிக் கொண்டிருக்கிறது என்றும் அவர் தெரிவித்திருந்தார்.