இந்தியா
12% பணியாளர்களை குறைக்கும் அன்அகாடமி : இரண்டாவது சுற்று வேலைநீக்கம்..!

கடந்த சில மாதங்களாக கூகுள் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களும் வேலை நீக்க நடவடிக்கை குறித்து அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன என்பதும் இதனால் வேலையில்லா திண்டாட்டம் உலகம் முழுவதும் பெருகிவருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.
ஆயிரக்கணக்கான ஊழியர்களைக் கொண்ட பெரிய நிறுவனங்களும் நூற்றுகணக்கான ஊழியர்களைக் கொண்ட சிறிய நிறுவனங்களும் 10 சதவீதம் முதல் 20 சதவீதம் அளவிலான ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பின் ஏற்பட்ட பணவீக்கம் மற்றும் பொருளாதார பின்னடைவு காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஆன்லைன் கல்வி தளமான அன்அகாடமி ஏற்கனவே ஒரு சில மாதங்களுக்கு முன்னர் பணிநீக்க நடவடிக்கை எடுத்த நிலையில் தற்போது மீண்டும் 12 சதவீத ஊழியர்களை குறைக்க இருப்பதாக கூறியுள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பணியாளர்களில் 10% வேலைநீக்கம் செய்தது என்பதும் இதனால் 350 பேர் வேலை இழந்தனர் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் தற்போது இந்நிறுவனம் மீண்டும் 12 சதவீத ஊழியர்களை வேலை நீக்கம் செய்துள்ளது. உலக பொருளாதாரத்தின் தற்போதைய யதார்த்தங்கள், மந்த நிலை மற்றும் பற்றாக்குறையான நிதி உதவி ஆகியவை தான் இந்த வேலை நீக்க நடவடிக்கைக்கு காரணங்களாக உள்ளன என அன்அகாடமி நிறுவனத்தின் சிஇஓ தெரிவித்துள்ளார்.
செலவு குறைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக கடந்த ஆண்டு நவம்பரில் 10% ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டது என்றும் இந்த முறை மற்றொரு பணிநீக்க நடவடிக்கையை தவிர்க்க முடியவில்லை என்றும் அவர் தெரிவித்தார். இந்த மாற்றங்களுக்கு ஏற்ப நாம் நிறுவனத்தை மாற்றி அமைக்க வேண்டிய நிலையில் உள்ளோம் என்றும் எனவே எங்களது முடிவை ஊழியர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்று நம்புகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.
5.5 பில்லியன் டாலர் மதிப்புள்ள அன்அகாடமி நிறுவனம் போட்டி தேர்வுகள், மொழி மற்றும் நிரலாக்கம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் படிப்பை வழங்கும் நாட்டின் முன்னணி கல்வி நிறுவனங்களில் ஒன்றாக உருவாகியுள்ளது. சாஃப்ட் பேங்க் பேஸ்புக் உள்பட ஒரு சில நிறுவனங்களிடம் இருந்து 440 மில்லியனுக்கும் அதிகமான நிதியை இந்நிறுவனம் திரட்டி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே இந்தியாவின் மற்றொரு கல்வி நிறுவனமான பைஜூஸ் கடஃந்த மாதம் 900 ஊழியர்களை வேலை நீக்கம் செய்த நிலையில் தற்போது அன்அகாடமி 12 சதவீத ஊழியர்களை வேலை நீக்கம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.