இந்தியா
ஏ.ஐ யால் கிடைத்திருக்கும் ஒரு புதிய வேலை வாய்ப்பு – என்ன ஆச்சரியமா இருக்கா?

காலங்காலமாக பல்வேறு பணிகள் அவற்றிற்க தகுந்த மனித ஆற்றல்களை கொண்டே செய்யப்பட்டு வந்த நிலை மாறி ஏ.ஐ என்ற புதிய தொழில்நுட்ப வரவால் பல மனிதர்கள் பல நாட்கள் செய்யக்கூடிய வேலைகளை இந்த தொழில்நுட்பம் மூலம் ஒருசில நாள்களிலோ அல்லது ஒரு சில மணி நேரங்களிலோ செய்து முடிக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டு வருவதால் பல்வேறு நிறுவனங்களில் வேலை பார்த்து வந்த பலர் தங்களது வேலை வாய்ப்பை இழந்து தவிக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் இந்த ஏ.ஐ. காரணமாக ஒரு புதிய வேலை வாய்ப்பு உருவாகியிருக்கிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா?, அட ஆமாங்க.. வாங்க பார்ப்போம்…
ஏ.ஐ. வந்தால் வேலை குறையும். நேரம் மிச்சமாகும் என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் தற்போது இந்த ஏ.ஐ. யால் ஒரு புதிய பிரச்னை உருவாகியுள்ளது. அதனால் பல வேலைகள் குறிப்பிட்ட நேரத்திற்குள் முடிக்க முடியாமல் திண்டாடி வருகின்றனர். அதனை தீர்க்க உருவானதே இந்த புதிய வேலை வாய்ப்பு. இதன் பெயர் “பாட் சிட்டிங்“.
அதாவது ஏ.ஐ மூலம் பெறப்படும் தகவல்கள் அணைத்தும் 100 சதவீதம் சரியானவை அல்ல. அவற்றை மீண்டும் ஒரு முறை சரிபார்த்து திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் இப்போது ஏற்பட்டுள்ளது. இது ஏனென்றால் இணையதளங்களில் கொட்டிக் கிடக்கும் தகவல்களை அலசி ஆராய்ந்து அதிலிருந்த நாம் கேட்கும் கேள்விகளுக்கு தகுந்த சற்றேறக்குறைய ஒத்துப் போகக் கூடிய தகவல்களைத்தான் ஏ.ஐ. தொழில்நுட்பம் நமக்கு வழங்கி வருகின்றது. இணையத்தில் கொட்டிக் கிடக்கும் எல்லா தகவல்களும் சரியானவை என்று இப்போது உறுதியாக கூற முடியாத நிலை உள்ளது. பல்வேறு தவறான தகவல்களும் பரவிக் கிடக்கின்றன. இதனால் நமக்குக் கிடைக்கக் கூடிய தகவல்களும் பல நேரங்களில் தவறானவையாகவும் அமைந்து விடுகின்றன. இதனை சரி செய்யவே மனிதர்களால் மட்டுமே செய்யப்படக் கூடிய வேலையே இந்த பாட் சிட்டிங்.
ஒரு புதிய ஆய்வின்படி ஊழியர்கள் வாரத்திற்கு சராசரியாக 6 மணி நேரம் ஏ.ஐ.யின் தவறுகளை திருத்தவும் பதில்களை சரிபார்க்கவும் மீண்டும் மீண்டும் கேள்விகளை கொடுத்து சரியான பதிலை பெறவும் செலவிடுகின்றனர்.
6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டிஜிட்டல் ஊழியர்களிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் 75 சதவீதம் பேர் தங்களின் தனிப்பட்ட உற்பத்தித் திறனை அதிகரித்துள்ளதாக கூறினாலும் வெறும் 13 சதவீதம் பேர் மட்டுமே நிறுவனத்தின் செயல்திறன் கணிசமாக உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதையே ஆய்வாளர்கள் ஏ.ஐ.புரடெக்டிவிட்டி பாரடாக்ஸ் (Productivity Paradox) என்று அழைக்கின்றனர்.
இன்று பல அலுவலகங்களில் ஊழியர்கள் தாங்களே வேலை செய்வதற்கு பதிலாக ஏ.ஐ. செய்த வேலையை மேற்பார்வை செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. மின்னஞ்சல்கள், அறிக்கைகள், பிரசண்டேஷன்கள், குறியீடுகள் என ஏ.ஐ. உருவாக்கும் அணைத்தையும் மனிதர்களே மீண்டும் சரி பார்க்க வேண்டியுள்ளது.
எனினும் சில நிபுணர்கள் இதை எதிர்மறையாக பார்க்கவில்லை. எதிர்காலத்தில் ஏ.ஐ யை பயன்படுத்துவதோடு மட்டுமல்லாமல் அதை சரியாக வழிநடத்தி அதன் பதில்களை மதிப்பீடு செய்யும் திறனும் முக்கிய வேலைத்திறன்களாக மாறும் என அவர்கள் கருதுகின்றனர்.
மொத்தத்தில் ஏ.ஐ மனிதர்களின் வேலையை முழுமையாக எடுத்துக் கொள்ளவில்லை. மாறாக வேலை செய்வது என்பதிலிருந்து ஏ.ஐ. செய்த வேலையை கண்காணிப்பது என்ற புதிய பொறுப்பை மனிதர்களுக்கு கொடுத்துள்ளது.
இப்போதைக்கு ஒவ்வொரு புத்திசாலி ஏ.ஐ.க்கும் பின்னால் அதன் தவறுகளை சரிசெய்யும் ஒருமனிதர் இருப்பதுதான் உண்மை.
அச்சகங்களில் எடிட்டர் மற்றும் புரூஃப் ரீடர் ஆகியோர் செய்யும் வேலையைப் போன்றதுதான் இந்த பாட் சிட்டிங் என்றால் மிகை ஆகாதுதானே.
















