சினிமா செய்திகள்
மகளை பாடலாசிரியராக தனது படத்தில் அறிமுகப்படுத்தும் பிரபல இயக்குநர்!

தான் இயக்கியுள்ள படத்தில் மகளை பாடலாசிரியராக அறிமுகப் படுத்துகிறார் பிரபல இயக்குநர்.
‘சென்னை 28’ படம் மூலமாக தமிழில் இயக்குநராக அறிமுகமானவர் வெங்கட் பிரபு. அதன் பிறகு ‘மங்காத்தா’, ‘மாநாடு’ உள்ளிட்ட பல வெற்றி படங்களை தமிழ் சினிமாவுக்கு கொடுத்துள்ளார். தமிழில் விதவிதமான ஜானர்களை முயற்சி செய்து வெற்றி பெற்ற இயக்குநர்களில் இவரும் ஒருவர். இந்த நிலையில் தற்போது ‘மாநாடு’ படத்தின் வெற்றிக்குப் பிறகு தமிழ்- தெலுங்கு என பைலிங்குவலாக நாக சைதன்யாவை வைத்து ‘கஸ்டடி’ திரைப்படத்தை இயக்கியிருக்கிறார் வெங்கட் பிரபு. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா- இளையராஜா இருவரும் இசையமைத்துள்ளனர்.
இந்த படம் இந்த வருடம் மே மாதம் வெளியாக இருக்கிறது. படப்பிடிப்பு முடிவடைந்தது தற்பொழுது போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்க பிரியாமணி, அரவிந்த் சாமி உள்ளிட்டப் பலரும் நடித்துள்ளனர். நாக சைதன்யாவின் சினிமா பயணத்தில் அதிக பட்ஜெட்டில் உருவான படங்களில் இதுவும் ஒன்று. இந்த நிலையில், இந்த படத்தில் இருந்து நாளை மறுநாள் வெளியாக இருக்கும் பாடலை வெங்கட் பிரபுவின் மகள் ஸ்ரீவாணி எழுதி இருக்கிறார்.
காவல் துறையை மையமாகக் கொண்டு உருவாகி இருக்கும் இந்த பாடலை எழுதியிருப்பதன் மூலம் தனது தந்தை படத்திலேயே அவரும் பாடலாசிரியராக அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பாடல் எழுதுவது மட்டும் இல்லாமல் பாடக்கூடிய திறமையும் பெற்றவர் இவர். விரைவில் பாடலாசிரியராக அறிமுகமானது போலவே, தனது தந்தை படத்திலேயே பாடலும் பாடுவார் என எதிர்பார்க்கலாம். இவருக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை இணையத்தில் தெரிவித்து வருகின்றனர்.



















