சினிமா
”தவறாக புரிந்து கொண்டீர்கள்”- ட்வீட் குறித்து விளக்கம் கொடுத்த விஷ்ணு விஷால்!

தன்னுடைய ட்வீட் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதாக விஷ்ணு விஷால் விளக்கம் கொடுத்துள்ளார்.
‘கட்டா குஸ்தி’ படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகர் விஷ்ணு விஷால் தற்போது ஐஷ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ‘லால் சலாம்’ படத்தில் நடித்து வருகிறார். அவருடைய முதல் திருமணம் விவாகரத்து ஆன நிலையில், தற்போது ஜூவாலா குட்டாவை திருமணம் செய்திருக்கிறார். சமீபத்தில் தன்னுடைய ட்வீட் ஒன்றில் அதில் அவர் தெரிவித்திருப்பதாவது, ‘பரவாயில்லை! நான் மீண்டும் முயற்சி செய்தேன். நான் மீண்டும் தோற்றுவிட்டேன். நான் மீண்டும் கற்றுக்கொண்டுள்ளேன். கடைசி முறை அது என் தோல்வியோ என் தவறோ கிடையாது. அது ஒரு துரோகம் மற்றும் ஏமாற்றம்’ என்று குறிப்பிட்டுள்ளார் விஷ்ணு விஷால். இந்த ட்வீட்டை பதிவிட்டப் பிறகு அதை டெலிட்டும் செய்து விட்டார். ஒருவேளை, ஜூவாலா குட்டாவுடனான திருமணத்தில் ஏதேனும் பிரச்சனையா என ரசிகர்கள் மத்தியில் இது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இப்போது குறித்து அவர் விளக்கமும் கொடுத்துள்ளார். அதில் அவர் தெளிவுப்படுத்தி இருப்பதாவது, ‘கடந்த சில நாட்களுக்கு முன்பு நான் பகிர்ந்திருந்த ட்வீட் ஒன்று அனைவராலும் தவறாக புரிந்து கொள்ளப்பட்டது. அது என்னுடைய புரொஃபஷனல் ட்வீட்டே தவிர தனிப்பட்ட வாழ்க்கை குறித்தது கிடையாது. நாம் ஒருவருக்கு கொடுக்கும் மிகப்பெரிய கிஃப்ட் நாம் அவர் மேல் வைத்திருக்கும் நம்பிக்கைதான். அது தோல்வி அடையும்போது நாம் நம் மேலேயே புகார் தெரிவிப்போம். அதுபற்றியே நான் கூறியிருந்தேன். மற்றபடி எல்லாம் நன்றாகவே இருக்கிறது’ என தெளிவுப்படுத்தி இருக்கிறார் விஷ்ணு விஷால்.