சினிமா
என் வாழ்வில் இந்த 34 நாட்கள்..’ நெகிழ்ந்து பேசிய ஐஷ்வர்யா ரஜினி!

வாழ்வில் மறக்க முடியாத நாட்கள் குறித்து பகிர்ந்துள்ளார் ஐஷ்வர்யா ரஜினிகாந்த்.
நடிகர் ரஜினிகாந்தின் மகளும் இயக்குநருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தன் வாழ்வில் மறக்க முடியாத நாட்கள் குறித்து பகிர்ந்து இருக்கிறார். நடிகர் தனுஷ் உடனான விவாகரத்துக்கு பிறகு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் முழுக்க முழுக்க தன்னுடைய இயக்கத்தில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் ‘பயணி’ என்ற மியூசிக்கல் ஆல்பத்தை முதலில் வெளியிட்டார். இதன் பிறகு தற்பொழுது ‘லால் சலாம்’ படத்தில் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த படத்தின் பூஜை நடைபெற்றது.
இதில் நடிகர் விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். விளையாட்டை மையமாகக் கொண்டு இந்த படம் உருவாகிறது. இதில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்திற்காக 10 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ள ரஜினிகாந்த் வழக்கமாக படங்களில் வாங்கும் சம்பளத்தில் ஒரு பகுதியை இந்த படத்திற்காக வாங்கி இருக்கிறார். இதன் படப்பிடிப்பு முழுக்க முழுக்க திருவண்ணாமலையில் நடைபெற்றது.
இந்த நிலையில் இதன் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. இதனை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் படக்குழுவினர் உடன் வீடியோ ஒன்றை எடுத்து தெரிவித்துள்ளார். அந்த வீடியோவை பகிர்ந்து அவர் தெரிவித்திருப்பதாவது, “கடந்த 34 நாட்களும் எங்கள் வாழ்வு இதுதான். இப்பொழுது முதற்கட்ட படப்பிடிப்பை முடித்துள்ளோம். இதை உருவாக்கி தந்த என் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. உங்கள் ஒத்துழைப்பினால் தான் எந்தவித தடங்கலும் இல்லாமல் இதனை நாம் முடித்து இருக்கிறோம். சந்தோஷம் என்பது நாம் எப்படி இருக்க வேண்டும் என்று நாமே தேர்ந்தெடுப்பது தான்.
பிறரால் நமக்கு கிடைப்பது கிடையாது’ என்பதையும் குறிப்பிட்டு சூசகமாக பேசி இருக்கிறார். இந்த முதற்கட்ட படப்பிடிப்பில் நடிகர் ரஜினிகாந்த் இன்னும் இணையவில்லை. அடுத்த கட்ட படப்பிடிப்பில் இணைவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ‘ஜெயிலர்’ படப்பிடிப்பில் தற்போது பிசியாக இருக்கும் ரஜினிகாந்த், அதை முடித்துவிட்டு மே மாதத்தில் ஞானவேல் இயக்கத்தில், லைகா தயாரிக்கும் தன்னுடைய 170வது படத்தில் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.