உலகம்
இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு செல்ல முடியாதா? கொரோனாவால் திடீர் கட்டுப்பாடுகள்!

இந்தியாவில் ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதும் கடந்த 24 மணி நேரத்தில் 4 லட்சம் பேருக்கு மேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் இந்தியாவில் இருந்து தங்களுடைய நாடுகளுக்கு வருவதற்கு பல நாடுகள் தடை விதித்துள்ளன. குறிப்பாக ஆஸ்திரேலியாவுக்கு இந்தியாவில் இருந்து வருவது கடும் குற்றம் என்றும் இந்தியாவில் இருந்து யாராவது வந்தால் 5 வருடம் சிறை தண்டனை என்றும் அறிவித்துள்ளது பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது.
இந்த நிலையில் தற்போது அமெரிக்காவும் இந்தியாவில் இருந்து வருபவர்களுக்கு தடை விதித்துள்ளது. மே மாதம் நான்காம் தேதி முதல் இந்த கட்டுப்பாடு அமலுக்கு வருகிறது என அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. இருப்பினும் அமெரிக்கர்கள் மற்றும் அமெரிக்காவில் குடியுரிமை பெற்றவர்களுக்கு இந்த கட்டுப்பாடு பொருந்தாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா இரண்டாவது அலை இந்தியாவில் தீவிரமடைந்த நிலையில் அமெரிக்கர்கள் அனைவரும் பாதுகாப்பாக நாடு திரும்புங்கள் என அண்மையில் அமெரிக்க அறிவித்திருந்த நிலையில் தற்போது இந்தியாவில் இருந்து அமெரிக்கா செல்பவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசு விதித்துள்ளது. எனவே இன்னும் சில மாதங்களுக்கு அமெரிக்காவுக்கு இந்தியர்கள் யாரும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் இந்தியாவில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக 100 மில்லியன் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை அமெரிக்கா அனுப்பி வைத்திருக்கிறது என்பதும் இந்த தகவலை அமெரிக்காவின் வெள்ளை மாளிகை உறுதி செய்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.






