தமிழ்நாடு
திமுகவுக்கு தான் எனது ஆதரவு: தினகரன் அதிரடி அறிவிப்பு!

தமிழக சட்டசபை சபாநாயகர் தனபாலுக்கு எதிராக திமுக கொண்டு வர உள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தில் அமமுக எம்எல்ஏ டிடிவி தினகரன் திமுகவுக்கு ஆதரவாகவும், சபாநாயகருக்கு எதிராகவும் வாக்களிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களான பிரபு, இரத்தினசபாபதி, கலைச்செல்வன் ஆகியோர் மீது சபாநாயகர் தனபால் நடவடிக்கை எடுக்க நோட்டீஸ் அனுப்பியதை அடுத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சபாநாயகர் தனபால் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர கடிதம் கொடுத்தார்.
இது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் எப்போது கொண்டுவரப்படும் இந்த தீர்மானம் வெற்றிபெறுமா போன்ற எதிர்பார்ப்புகள் நிலவியது. இந்நிலையில் சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் ஜூலை 1-ஆம் தேதி கொண்டுவரப்படும் என பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக சட்டமன்ற மானியக் கூட்டத் தொடர் வரும் ஜூன் 28-ஆம் தேதி கூடவுள்ளது. ஜூன் 28-ஆம் தேதி தொடங்க உள்ள இந்த கூட்டத் தொடரானது ஜூலை 30-ஆம் தேதிவரை 23 நாட்களுக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்தார் சபாநாயகர் தனபால், அப்போது, ஜூன் 28-ஆம் தேதி தொடங்கும் சட்டமன்றக் கூட்டத்தில் மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்படும். 29, 30 ஆகிய தேதிகளில் சனி, ஞாயிறு விடுமுறை. சபாநாயகர் மீது திமுக கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் ஜூலை 1-ஆம் தேதிக்கான பட்டியலில் எடுத்துக்கொள்ளப்படும். அனைத்து நாட்களிலும் கேள்வி நேரம் எடுத்துக் கொள்ளப்படும் என்றார்.
இந்நிலையில் தங்க தமிழ்செல்வன் உடனான மோதல் காரணமாக செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரனிடம் சபாநாயகருக்கு எதிராக திமுக கொண்டுவரவுள்ள தீர்மானத்தில் உங்கள் நிலைப்பாடு என்ன என நிரூபர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த தினகரன், எங்கள் கட்சி 18 சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்த சபாநாயகர் தனபாலுக்கு எதிராக தான் வாக்குகளிப்பேன் என்றார். இதனால் திமுக சபாநாயகருக்கு எதிராக கொண்டுவரவுள்ள தீர்மானத்தை தினகரன் ஆதரிக்கவுள்ளார்.




















