இந்தியா
மக்களவையில் இன்று மாஸ் காட்டிய தயாநிதி மாறன்: அனல் பறந்த விவாதம்!

குடியரசுத் தலைவர் உரையின் மீதான விவாதம் மக்களவையில் இரண்டு நாட்களாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று மக்களவையில் பேசிய திமுக எம்பி தயாநிதி மாறன் அதிமுக அரசு ஊழல் அரசாங்கமாக செயல்படுவதாக குற்றம்சாட்டினார். இதனால் பாஜக எம்பிக்கும் தயாநிதி மாறனுக்கும் இடையே விவாதம் அனல் பறந்தது.
இன்று மக்களவையில் பேசிய தயாநிதி மாறன், 2019 மக்களவைத் தேர்தலில் பாஜகவின் வெற்றிக்கு பணபலம், சிபிஐ, வருமான வரித் துறை ஆகியவை முக்கிய காரணம். தேர்தல் ஆணையமும் அதற்கு உதவிபுரிந்தது. எதிர்க்கட்சிகளின் பலவீனத்தால் வட இந்தியாவில் பாஜக வென்றது என எடுத்த எடுப்பிலேயே பாஜகவை ஒரு பிடிபிடித்த தயாநிதி மாறன் பின்னர் தமிழக அரசை விமர்சித்தார்.
உலகம் வெப்ப மயமாகி வருவதால் நாட்டில் சென்னை உள்ளிட்ட நகரங்களில் நிலத்தடி நீர் மட்டம் குறையும் அபாயம் உள்ளதாக நிதி ஆயோக் தெரிவித்துள்ளது. குடிநீர் பற்றாக்குறையை போக்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஊழலுக்கு எதிராக தொடர்ந்து போராடுவோம் என்று குடியரசுத் தலைவர் உரையில் கூறியுள்ளார். ஆனால் பாஜக கூட்டணியில் உள்ள தமிழகத்தை ஆளும் அதிமுக அரசு ஊழல் மிகுந்த அரசாங்கமாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. மக்கள் பிரச்சினைகளைப் பற்றி அவர்கள் கவலைப்படவில்லை என்று கடுமையாக விமர்சித்தார்.
இதனையடுத்து அவையில் கூச்சல் குழப்பம் நிலவியது. பாஜக கூட்டணி வைத்துள்ள அதிமுக தலைமையிலான தமிழக அரசை ஊழல் அரசு என கூறியதற்கு பாஜக எம்பிக்கள் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதற்கு ஆவேசமாக பதிலளித்த தயாநிதி மாறன், குடியரசுத் தலைவரின் உரையின் மீது விவாதம் நடைபெற்று வருகிறது. ஊழல் குறித்து இந்த அவையில் பேசுவதற்கு எனக்கு அனைத்து உரிமைகளும் உள்ளன. அதிமுக அமைச்சர்கள் மீது பல்வேறு ஊழல் வழக்குகள் உள்ளன. சென்னையிலுள்ள தலைமைச் செயலகத்திலேயே வருமான வரித் துறை சோதனை நடைபெற்றது என கூறினார்.






















