உலகம்
அமெரிக்கா ஏன் “ஆர்ட்டிக்கின் ”கிரீன்லாந்து மீது இவ்வளவு ஆர்வம் காட்டுகிறது

அமெரிக்கா ஏன் “ஆர்ட்டிக்கின் கச்சதீவு”கிரீன்லாந்து மீது இவ்வளவு ஆர்வம் காட்டுகிறது என்பது உலக அரசியலில் தற்போது மிக முக்கியமான சூடு பிடிக்கும் விவகாரமாக மாறியுள்ளது.
இதற்கு “Rare earth elements” ஐ ஆட்டையைப்போட அமெரிக்கா முயல்கிறது என காரணம் கூற்ப்பட்டாலும் உண்மை என்னவெனில் சீனாவுடன் கூடிய அமெரிக்காவின் Trade war தான் உண்மையான காரணம் .
தற்போது சீனா தனது பொருட்களை ஐரோப்பாவிற்கு அனுப்ப சூயஸ் கால்வாய் (Suez Canal) மற்றும் மலாக்கா நீரிணை (Strait of Malacca) வழியாகச் செல்கிறது. ஆனால், காலநிலை மாற்றத்தால் ஆர்க்டிக் பனிக்கட்டிகள் உருகுவதால், புதிய 3 கடல் வழித்தடங்கள் உருவாகியுள்ளன:
அவையாவன
1-வடகிழக்கு வழித்தடம் (Northern Sea Route): இது ரஷ்யாவின் எல்லை வழியாகச் செல்கிறது.
2-வடமேற்கு வழித்தடம் (Northwest Passage): இது கனடா மற்றும் கிரீன்லாந்து வழியாகச் செல்கிறது.
3-மத்திய ஆர்க்டிக் வழித்தடம் (Transpolar Sea Route): இது எதிர்காலத்தில் பனி முழுவதும் உருகினால் நேரடியாக துருவம் வழியாகச் செல்லும் வழி.
சூயஸ் கால்வாய் வழியாகச் செல்வதை விட, ஆர்க்டிக் வழித்தடம் தூரத்தை 30% முதல் 40% வரை குறைக்கிறது. இதன் மூலம் எரிபொருள் செலவு மிச்சமாவதுடன், சீனா தனது வர்த்தகத்தை மிக வேகமாக ஐரோப்பிய நாடுகளுக்குக் கொண்டு செல்ல முடியும்.
அமெரிக்கா உலக வர்த்தகத்தின் மீது தனது ஆதிக்கத்தைச் செலுத்த விரும்புகிறது. தற்போது சீனா பயன்படுத்தும் பழைய வழித்தடங்களை குறிப்பாக Suez கால்வாய் வழியை அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளால் எளிதில் கண்காணிக்கவோ அல்லது தேவைப்பட்டால் கட்டுப்படுத்தவோ (Blockade) முடியும்.
சீனா ஆர்க்டிக் வழித்தடத்தைப் பயன்படுத்தத் தொடங்கினால், அமெரிக்காவின் இந்த ஆதிக்கம் குறையும். கிரீன்லாந்து இந்த ‘வடமேற்கு வழித்தடத்தின்’ நுழைவு வாயிலாக (Gateway) உள்ளது. கிரீன்லாந்தை தனது கட்டுப்பாட்டில் வைப்பதன் மூலம், ஆர்க்டிக் பகுதியில் சீனாவின் நடமாட்டத்தை அமெரிக்காவால் தடுக்க முடியும்.
கிரீன்லாந்து வட அமெரிக்காவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையில் ஒரு ‘இயற்கையான விமானந்தாங்கி கப்பல்’ (Natural Aircraft Carrier) போல உள்ளது. அமெரிக்காவிற்கு ஏற்கனவே அங்கு Pituffik – Thule விண்வெளித் தளம் உள்ளது. சீனா ஆர்க்டிக் பகுதியில் தனது முதலீடுகளை (துறைமுகங்கள், விமான நிலையங்கள்) அதிகரிக்க முயன்றபோது, அமெரிக்கா அதைத் தடுத்து நிறுத்தியது. கிரீன்லாந்தை வாங்குவது அல்லது முழுமையாகக் கட்டுப்படுத்துவது சீனாவின் இந்த ‘துருவ பட்டுப்பாதை’ கனவைச் சிதைக்கும் ஒரு வழியாக அமெரிக்கா பார்க்கிறது.
சீனா தற்போது அரிய வகை மண் தனிமங்கள் (Rare Earth Elements) உற்பத்தியில் உலகளவில் முன்னணியில் உள்ளது. இந்தத் தனிமங்கள் ஸ்மார்ட்போன்கள், மின்சார வாகனங்கள் மற்றும் போர் ஆயுதங்கள் தயாரிக்க மிக அவசியம். கிரீன்லாந்தில் இந்த வளங்கள் மிக அதிகமாகக் கொட்டிக் கிடக்கின்றன. சீனா அங்கு சுரங்கம் அமைக்க முயன்றது, அதைத் தடுத்த அமெரிக்கா, அந்த வளங்களை தானே கைப்பற்றத் துடிக்கிறது.
சீனா ஆர்க்டிக் வழியாக வேகமாக வர்த்தகம் செய்து ஐரோப்பாவைத் தன் பக்கம் ஈர்ப்பதை அமெரிக்கா விரும்பவில்லை. அந்தப் பாதையை மறிக்க அல்லது கண்காணிக்க ஒரு ‘சுவராக’ கிரீன்லாந்தை அமெரிக்கா பயன்படுத்த நினைக்கிறது. இது வெறும் நிலப்பரப்புக்கான ஆசை மட்டுமல்ல, உலகப் பொருளாதாரத்தை யார் ஆளப்போகிறார்கள் என்பதற்கான போட்டி.
இதில் வெல்லப்போவது யார் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

