தமிழ்நாடு
100 அடிக்கு திடீரென உள்வாங்கிய கடல்: புதுவையில் மக்கள் அச்சம்!

புதுவையில் திடீரென சுமார் 100 அடிக்கு கடல் உள்வாங்கியதால் பொதுமக்கள் கடும் அச்சம் அடைந்துள்ளனர்.
புதுவையில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து உள்ளதை அடுத்து கடற்கரையில் மக்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் நேற்று மாலை சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் கடற்கரையில் காற்று வாங்க கூடியிருந்த நிலையில் திடீரென கடல் உள்வாங்கியது. கொஞ்சம் கொஞ்சமாக உள்வாங்கிய கடல் சுமார் 100 அடி தூரம் வரை பின்வாங்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
புதுவை காந்தி சிலை பின்புறம் முதல் துறைமுகம் வரை கடல் உள்வாங்கி காணப்பட்டதால் அந்த பகுதியில் மக்கள் பெரும் அச்சம் அடைந்தனர். ஒரு சில நிமிடங்களில் கடல் மீண்டும் சரியாகிவிடும் என்று பொதுமக்கள் காத்திருந்த நிலையில் சில மணி நேரங்கள் கடல் உள்வாங்கியதால் பொதுமக்கள் அச்சம் அடைந்து திரும்பிவிட்டனர். அதன் பின்னர் கடல் மீண்டும் பழையபடி சரியானதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
புதுவையில் கடல் திடீரென உள்வாங்கியதை பொதுமக்கள் புகைப்படம் மற்றும் வீடியோக்களை எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவை தற்போது வைரலாகி வருகிறது.
இந்த நிலையில் கடல் உள்வாங்கியது குறித்து மீன்வளத்துறை அதிகாரிகள் கூறியபோது புதுவையில் கடல் இயற்கைக்கு மாறாக உள்வாங்கியது சற்று ஆச்சரியத்தை அளித்துள்ளது. ஆழ்கடலில் அடுக்குகள் நகர்ந்து உள்வாங்கி இருக்கலாம் அல்லது கடல் பகுதியில் லேசான நில அதிர்வு ஏற்பட்டு இருக்கலாம். இதுகுறித்து காரணத்தை ஆய்வு செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.
தமிழகத்தில் திருச்செந்தூர் உள்பட ஒருசில பகுதிகளில் அவ்வப்போது கடல் உள்வாங்கி வருவது வழக்கமான ஒன்றே. ஆனால் புதுவையில் கடல் உள்வாங்கியது அந்த பகுதி மக்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.





















