தமிழ்நாடு
சிலிண்டருக்கு ரூ.300 மானியம், இலவச லேப்டாப்.. அசத்தும் புதுவை பட்ஜெட்..!

சிலிண்டருக்கு மாதம் ரூபாய் 300 மானியம் உள்பட பல அதிரடி அறிவிப்புகள் இன்று தாக்கல் செய்யப்பட்ட புதுவை மாநில பட்ஜெட்டில் உள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
புதுவை சட்டசபையில் இன்று முதலமைச்சர் ரங்கசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் பல அதிரடி அறிவிப்புகள் வெளியாகி உள்ள நிலையில் அவற்றை ஒவ்வொன்றாக பார்ப்போம்.
புதுவை பட்ஜெட்டில் பிளஸ் டூ மாணவர்களுக்கு இலவசமாக மடிக்கணினி வழங்கப்படும் என்றும் அது மட்டுமின்றிஆறாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரையிலான வகுப்புகள் அனைத்தும் சிபிஎஸ்சி பாடத்திட்டமாக மாற்றப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும் பெண் குழந்தைகளின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு பெண் குழந்தை பிறந்தவுடன் அந்த பெண் குழந்தையின் பெயரில் ஐம்பதாயிரம் ரூபாய் டெபாசிட் செய்யப்படும் என்றும் 18 ஆண்டுகள் கழித்து அந்த பெண் குழந்தையின் மேல்கல்வி அல்லது திருமணத்திற்கு அந்த நிரம்பர வாய்ப்புத் தொகை பயன்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் சிலிண்டருக்கு மாதம் ரூபாய் 300 மானியம் வழங்கப்படும் என்று அதிரடியாக புதுவை முதல்வர் ரங்கசாமி அறிவித்தார். இதன் மூலம் புதுவை அரசுக்கு 126 கோடி ரூபாய் கூடுதல் செலவாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் புதுச்சேரி சாலை போக்குவரத்து கழகத்தால் இயக்கப்பட்டு வரும் உள்ளூர் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்ய வழிவகை செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார். விரைவில் இதற்கான அறிவிப்பு வரும் என்றும் அவர் கூறினார்.
மேலும் இந்த பட்ஜெட்டில் மின்சார துறைக்கு ரூ.1946 கோடியும் மின் சிக்கனத்தை கடைபிடிக்க 4.6 கோடியில் எல்.இ.டி தெரு விளக்குகள் அமைக்கவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும் தமிழ் வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக உலகத்தமிழ் மாநாடு புதுவையில் நடத்தப்படும் என்றும் முதல்வர் எங்க சாமி அறிவித்தார். மேலும் மீனவர் உதவி தொகை தற்போது 3000 ரூபாய் என்று இருக்கும் நிலையில் அதை 3500 ஆக உயர்த்தப்படும் என்றும் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.