ஆரோக்கியம்
மாலை ஸ்நாக்ஸுக்கு ஆரோக்கிய தேர்வு: சத்தான கம்பு இனிப்பு கொழுக்கட்டை செய்வது எப்படி?

மாலை நேரத்தில் பிள்ளைகள் அடிக்கடி ஸ்நாக்ஸ் கேட்பது இயல்பான ஒன்று. அப்போது பஜ்ஜி, போண்டா, வடை போன்ற எண்ணெய் அதிகம் உள்ள உணவுகளுக்கு பதிலாக, உடலுக்கு நல்ல சத்துகளை தரும் ஸ்நாக்ஸை செய்து கொடுத்தால் அவர்களின் ஆரோக்கியம் மேம்படும்.
உங்கள் வீட்டில் கம்பு (Pearl Millet) இருந்தால், அதைக் கொண்டு கம்பு இனிப்பு கொழுக்கட்டை செய்து கொடுக்கலாம். இந்த கொழுக்கட்டை செய்வது மிகவும் எளிமையானது. அதே நேரத்தில் நார்ச்சத்து, தாது உப்புகள் நிறைந்த சத்தான உணவாகும்.
சிறுதானியங்களை தினசரி உணவில் சேர்த்துக் கொள்வது உடலின் செரிமான சக்தியை அதிகரிப்பதோடு, சர்க்கரை அளவையும் கட்டுப்படுத்த உதவும். அதனால் வாரத்தில் ஒருசில நாட்களாவது சிறுதானிய கொழுக்கட்டைகளை மாலை ஸ்நாக்ஸாக எடுத்துக் கொள்ளலாம்.
இப்போது வீட்டிலேயே எளிதாக கம்பு இனிப்பு கொழுக்கட்டை செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்.
🥣 தேவையான பொருட்கள்
கம்பு – 1½ கப்
பொடித்த வெல்லம் – 1 கப்
தண்ணீர் – ¼ கப்
துருவிய தேங்காய் – ½ கப்
நெய் – 1 டீஸ்பூன் + தேவையான அளவு
ஏலக்காய் தூள் – ¼ டீஸ்பூன்
🍽️ செய்முறை
முதலில் கம்பை இரண்டு முறை நன்றாக கழுவி, போதுமான நீர் ஊற்றி சுமார் 8 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
ஊறிய கம்பை மீண்டும் கழுவி, ஒரு துணியில் பரப்பி சிறிது நேரம் காய வைக்கவும்.
பின்னர் மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைத்து மாவாக மாற்றிக் கொள்ளுங்கள்.
ஒரு பாத்திரத்தில் பொடித்த வெல்லம் மற்றும் தண்ணீர் சேர்த்து கரைத்து வைக்கவும்.
வாணலியை அடுப்பில் வைத்து, வெல்லம் நீரை வடிகட்டி ஊற்றுங்கள்.
அதில் துருவிய தேங்காய், 1 டீஸ்பூன் நெய் மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து நன்றாக கிளறவும்.
பின்னர் அரைத்த கம்பு மாவை சேர்த்து, நீர் வற்றும் வரை மிதமான தீயில் கிளறி இறக்கவும்.
இந்த கலவையை ஒரு பாத்திரத்தில் போட்டு மேலே சிறிது நெய் தடவி, மூடி வைத்து கை பொறுக்கும் அளவிற்கு குளிர விடுங்கள்.
கையில் நெய் தடவி, மாவை சிறு உருண்டைகளாக எடுத்து பிடி கொழுக்கட்டை போல பிடிக்கவும்.
இட்லி தட்டில் வைத்து, இட்லி பாத்திரத்தில் நீர் கொதித்த பிறகு, குறைந்த தீயில் 30 நிமிடம் வேக வைத்து இறக்கவும்.
இப்போது சுவையான, சத்தான கம்பு இனிப்பு கொழுக்கட்டை தயார்!

