தமிழ்நாடு
வருமானத்துக்கு அதிகமாக ரூ.11.32 கோடி சொத்து: கே.பி.அன்பழகன், மகன்கள், மருமகள் மீது வழக்குப்பதிவு!

முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் வீட்டில் இன்று அதிகாலை முதல் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை செய்து வருகின்றனர் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி முன்னாள் அமைச்சர் கேபி அன்பழகன் அவர்கள் வருமானத்திற்கு அதிகமாக ரூ.11.32 கோடி சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் தமிழகம் மட்டுமின்றி தெலுங்கானா மாநிலத்திலும் கேபி அன்பழகனுக்கு சொந்தமான இடங்கள் இருப்பதாகவும் அந்த இடங்களிலும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை செய்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் முன்னாள் அமைச்சர் கேபி அன்பழகன் மட்டுமின்றி அவரது மனைவி மல்லிகா, மகன்கள் சசிமோகன், சந்திரமோகன் மற்றும் மருமகள் வைஷ்ணவி ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்துள்ளதாக தெரிகிறது.
சென்னை, கிருஷ்ணகிரி, தர்மபுரி சேலம் உள்பட 57 இடங்களில் 200க்கும் அதிகமான லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருவதாகவும் இந்த சோதனைக்கு பின்னர் தான் சிக்கிய ஆவணங்கள் குறித்த தகவல் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே முன்னாள் அமைச்சர்களான தங்கமணி, எஸ் பி வேலுமணி, சி விஜயபாஸ்கர், எம்ஆர் விஜயபாஸ்கர், கே.சி.வீரமணி உள்ளிட்டோரின் வீடுகளில் சோதனை செய்யப்பட்ட நிலையில் தற்போது லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை செய்யப்படும் ஆறாவது அமைச்சர் கேபி அன்பழகன் என்பது குறிப்பிடத்தக்கது.








