இந்தியா
வகுப்பறையில் தூக்கிட்டு தற்கொலை செய்த 16 வயது மாணவன்: தெலுங்கானாவில் அடுத்தடுத்து சோகம்!

தெலுங்கானாவின் ரங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வந்த 16 வயதே ஆன மாணவன் ஒருவன் வகுப்பறையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

#image_title
நகுலா சாத்விக் என்ற 16 வயது மாணவன் நரசிங்கி பகுதியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வந்துள்ளான். இந்நிலையில் அவன் நேற்று இரவு அங்குள்ள வகுப்பறை ஒன்றில் உள்ள மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளான். தகவல் அறிந்து அங்கு வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மாணவன் நகுலா சாத்விக் வகுப்பு முடிந்த பின்னர் நேற்று இரவு 10.30 மணியளவில் தூக்கு போட்டு உயிரிழந்து இருக்க கூடும் என்றும் ஏன் தற்கொலை செய்துகொண்டார் என்பது விசாரணைக்கு பின்பே கூற முடியும் என்று காவல்துறை கூறியுள்ளது. இந்நிலையில், கல்லூரி நிர்வாகத்தின் கொடுமையால் தான் மாணவர் இந்த முடிவை எடுத்ததாக அவரது பெற்றோர் குற்றம் சாட்டுகின்றனர்.
இதேப்போன்று, வாரங்கால் மாவட்டத்தில் முதலாம் ஆண்டு படித்து வந்த மருத்துவ மாணவி பிரீத்தி சில தினங்களுக்கு முன்னர் தற்கொலை செய்துகொண்டார். நிஜாமாபாத் அரசு மருத்துவ கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்த தாசரி ஹர்ஷா என்ற மாணவி கடந்த சனி கிழமை விடுதி அறையில் தற்கொலை செய்து கொண்டார். தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த மாணவி ஒருவர் தனது உறவினர் வீட்டில் மர்ம மரணம் அடைந்தார்.
நகுலா சாத்விக்கின் தற்கொலையுடன் சேர்த்து தெலுங்கானாவில் கடந்த ஒரு வார காலத்தில் மட்டும் கல்லூரி மாணவ மாணவிகள் என அடுத்தடுத்து 4 பேர் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.