இந்தியா
தன் உயிரையும் பொருட்படுத்தாமல் 16 பேரை காப்பாற்றிய காவல் அதிகாரி: குவியும் பாராட்டு!

தெலுங்கானா மாநிலத்தில் ஐதராபாத் நகரில் அரசுத் தேர்வாணைய வினாத்தாள் கசிந்தது. இப்பிரச்சனையில், அம்மாநிலத்தை ஆளும் பாரதீய ராஷ்டீரிய சமிதி கட்சிக்கு எதிராக அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அவர்களைத் தடுத்து, காவல் துறையினர் கைது செய்து வேனில் ஏற்றினர். அப்போது போராட்டக்காரர்கள் 16 நபர்களை வேனில் ஏற்றிக் கொண்டு, சைபாபாத் காவல் நிலையத்திற்கு காவல் துறையினர் கொண்டு சென்றனர்.
தடுமாறிய வேன்
கைரதாபாத்தில் உள்ள பறக்கும் பாலத்தில் அந்த வேன் சென்று கொண்டிருந்த போது, காவலரான ஓட்டுநர் ரமேஷ் அவர்களுக்கு (வயது 58) திடீரென வலிப்பு வந்ததால், மயங்கி சரிந்துள்ளார். இது குறித்து, காவல் ஆய்வாளர் கருணாகர் ரெட்டி கூறும் போது, போலீஸ் வேனில் போராட்டக்காரர்கள் 16 பேர் மற்றும் நான் அமர்ந்து இருந்தோம். அப்போது வேன் பறக்கும் பாலம் பகுதியை கடந்து சென்றதும், ஓட்டுநர் ரமேஷ் சுயநினைவை இழந்ததால், வேன் கட்டுப்பாடின்றி சென்றது. அந்த வேன், சாலையின் நடுவில் பிரிந்து செல்வதற்கு வழிகாட்டும் தடுப்பான் மீது மோதியதில், தள்ளாடிய படியே சென்றது.
ஹீரோவான காவல் அதிகாரி
உடனடியாக நான் பின் கதவை திறந்து, வேனில் இருந்து கீழே குதித்து விட்டேன். இதனால் எனக்கு வலது முழங்கால் பகுதியில் காயம் ஏற்பட்டது. அதன் பிறகு, உடனே ஓடிச் சென்று வேனைப் பிடித்து, ஓட்டுநரின் கதவைத் திறந்தேன். ஓட்டுநர் ரமேஷ் சீட்டில் சரிந்தபடி காணப்பட்டார். அவருடைய வாயில் இருந்து இரத்தம் வழிந்து கொண்டிருந்தது.
உடனே வேனை ஒரு கையால் பிடித்து இடதுபுறம் திருப்பினேன். மற்றொரு கையால், வண்டியின் பிரேக்கை அழுத்திப் பிடித்தேன். அதிர்ஷ்டவசமாக இந்த வேன் ஒரு பெரிய மரத்தின் மீது மோதி நின்று விட்டது எனக் கூறினார்.
இதனால், தான் காயம் அடைந்த நேரத்திலும், அதனை கருத்தில் கொள்ளாமல் கருணாகரன் உடனே ஓடிச் சென்று வேனில் இருந்த 16 பேரின் உயிரையும் காப்பாற்றி உள்ளார். இதற்காக அவருடைய உயரதிகாரிகள் அவரை வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.