தமிழ்நாடு
பிரதமர் வருவதாக உறுதியளிக்கவில்லை: முதல்வர் பழனிச்சாமி!

பிரதமர் மோடியை சந்திக்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று டெல்லி சென்றார். இந்த சந்திப்பின் போது கஜா புயல் பாதிப்பு குறித்து பிரதமரிடம் எடுத்துக்கூறிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கஜா புயல் பாதிப்பை சீரமைப்பதற்காக நிதியை வழங்குமாறு கோரிக்கை வைத்தார்.
பிரதமர் உடனான முதல்வரின் சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. அப்போது கஜா புயலின் நிரந்தர சீரமைப்பு பணிகளுக்காக 15 ஆயிரம் கோடி ரூபாய் வழங்க வேண்டும் எனவும், அதில் தற்காலிகமாக உடனடியாக 1500 கோடி ரூபாய் மத்திய அரசு வழங்க வேண்டும் என வலியுறுத்தியதாக முதல்வர் தெரிவித்தார்.
மேலும் மத்திய குழு உடனடியாக கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட உள்ளதாக தெரிவித்த முதல்வரிடம் பிரதமர் தமிழகம் வந்து கஜா புயல் பாதிப்பை பார்வையிடுவாரா என கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த முதல்வர், அதுபற்றி எந்த உறுதியும் அளிக்கவில்லை. முதல் கட்டமாக மத்திய குழுவை அனுப்பி வைப்பதாக தெரிவித்துள்ளார் என்றார்.












