சினிமா செய்திகள்
மாஸ்டர் படம் ஒரே நாளில் எல்லா மொழிகளிலும் ரிலீஸ்!

மாஸ்டர் திரைப்படத்தை ஒரே நாளில் எல்லா மொழிகளிலும் வெளியிட படக்குழுவினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் மற்றும் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாஸ்டர்’. இந்தப் படம் கடந்த ஏப்ரலில் வெளியாவதாக இருந்தது. ஆனால் கொரோனா காராணமாக வெளியிடப்படவில்லை.
மேலும் மற்ற திரைப்படங்கள் அமேசான், நெட்பிலிக்ஸ் போன்ற ஓடிடி தளங்களில் வெளியாகின. இருப்பினும் மாஸ்டர் திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிடவே படக்குழுவினர் முனைப்பு காட்டி வந்தனர். அதுவும் தற்போது 50% இருக்கைகளுடன் மட்டுமே திரையரங்குகள் செயல்பட அனுமதி இருப்பதால், நூறு சதவீத இருக்கைகள் அனுமதி வந்த பிறகே மாஸ்டர் வெளியாகும் என்று படத்தின் தயாரிப்பாளர் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார்.
இந்த நிலையில், வரும் பொங்கலுக்கு மாஸ்டர் திரைப்படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. தமிழில் வெளியாகும் அதே நாளில் தெலுங்கு, ஹிந்தி என மற்ற மொழிகளிலும் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
இதற்காக மொழிமாற்றுப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. அனைத்து மொழிகளிலும் மாஸ்டர் வெளிவருவதால், இந்தப் பொங்கல் விருந்தாக மாஸ்டர் திரைப்படம் இருக்கும் என்பது உறுதியாகியுள்ளது.

















