உலகம்
முடிவுக்கு வந்தது வொர்க் ப்ரம் ஹோம்.. மீண்டும் பிஸியாகும் அலுவலகங்கள்..!

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னாள் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டபோது பெரும்பாலான நிறுவனங்கள் வொர்க் ப்ரம் ஹோம் என்ற முறையை அறிமுகம் செய்து வைத்தன என்பதும் இந்த முறை ஊழியர்களுக்கு மிகவும் வசதியாக இருந்ததால் கொரோனா வைரஸ் பாதிப்பு முடிந்த பின்னரும் இதனை தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு சிலர் அலுவலகத்திற்கு வர சொன்னால் தங்கள் வேலையை ராஜினாமா செய்யும் அளவுக்கு வந்துவிட்டனர் என்பதும் எனவே ஊழியர்களை இழக்காமல் இருப்பதற்காக சில நிறுவனங்கள் வொர்க் ப்ரம் ஹோம் முறையை தொடர்ந்து தந்து வந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒரு சில நிறுவனங்கள் ஹைபிரிட் என்று கூறப்படும் மூன்று நாட்கள் அலுவலகம், இரண்டு நாட்கள் வீட்டில் இருந்து பணி செய்யும் முறையை கடைபிடித்து வந்தன.
இந்த நிலையில் தற்போது கிட்டத்தட்ட அனைத்து நிறுவனங்களுமே வொர்க் ப்ரம் ஹோம் முறையை முடிவுக்கு கொண்டு வந்து முழுவதுமாக அலுவலகத்தில் வந்து பணி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன. அலுவலகம் வராத ஊழியர்கள் வேலை இழக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டதை அடுத்து தற்போது மீண்டும் ஊழியர்கள் அலுவலகம் வர தொடங்கியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் அலுவலகத்திற்கு வந்து வேலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தும் முன்னணி நிறுவனங்கள் என்னென்ன என்பதை தற்போது பார்ப்போம்.
அமேசான்: இந்நிறுவனம் தனது ஊழியர்களை மே 1 முதல் வாரத்தில் மூன்று நாட்கள் அலுவலகங்களுக்குத் திரும்பச் சொன்னதாகக் கூறப்படுகிறது. சி.இ.ஓ ஆண்டி ஜெஸ்ஸி ’மேலாளர்கள் தங்கள் கீழ் பணிபுரியும் ஊழியர்கள் அலுவலகம் வருவதை வரும் அக்டோபர் மாதத்திற்குள் உறுதி செய்ய வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.
ஜெனரல் மோட்டார்ஸ்: கார் தயாரிப்பு நிறுவனம் தனது ஊழியர்களை ஜனவரி 30 முதல் அலுவலகத்திற்குத் திரும்புமாறு கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் ஊழியர்கள் வாரத்தில் மூன்று நாட்கள் அலுவலகங்களுக்கு வருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இந்த அறிவிப்பு ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவன ஊழியர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
மெட்டா: இந்நிறுவனத்தின் முதல் பெரிய அளவிலான 11,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பிறகு மேலும் 10,000 தொழிலாளர்களை பணிநீக்கம் செய்வதாக தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் சமீபத்தில் அறிவித்தார். மெட்டா தனது ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்யும்படி கேட்டு கொண்டாலும், மார்க் ஜுக்கர்பெர்க் தற்போது சக ஊழியர்களுடன் நேரில் பணியாற்றுவது தான் சிறந்தது என்று கூறி வருகிறார்.
நியூஸ் கார்ப்: வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலின் வெளியீட்டாளர் சமீபத்தில் தனது ஊழியர்களுக்கு அலுவலக குறிப்பேடு ஒன்றை வெளியிட்டு, உடனடியாக அனைத்து ஊழியர்களும் அலுவலகத்திற்குத் திரும்பும்படி தெரிவித்துள்ளது. இனிமேல் வீட்டிலிருந்து வேலை செய்வதை அனுமதிக்க முடியாது என்றும் கூறியுள்ளது.
Snap Inc: இந்நிறுவனத்தின் சி.இ.ஓ எவான் ஸ்பீகல் தனது ஊழியர்களை பிப்ரவரியில் வாரத்தில் நான்கு நாட்கள் அலுவலகத்திற்கு வருமாறு கேட்டுக் கொண்டார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20% பணியாளர்களை பணிநீக்கம் செய்த பின்னர் இந்த அறிவிப்பு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்டார்பக்ஸ்: இந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஹோவர்ட் ஷுல்ட்ஸ் தனது ஊழியர்களை ஜனவரியில் வாரத்தில் மூன்று நாட்கள் அலுவலகங்களுக்குத் திரும்ப சொன்னார். கார்ப்பரேட் ஊழியர்கள் வாரத்தில் ஒன்று முதல் இரண்டு நாட்கள் அலுவலகத்தில் இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.