உலகம்
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அடுத்தகட்ட வேலைநீக்கம்.. வீட்டுக்கு அனுப்பப்பட்ட 559 ஊழியர்கள்..!

மைக்ரோசாப்ட் நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் 10,000 ஊழியர்களை வேலை நீக்கம் செய்த நிலையில் தற்போது மீண்டும் 559 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உலகம் முழுவதும் கடந்த சில மாதங்களாக பணிநீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்பதும் இதில் லட்சக்கணக்கானோர் வேலை இழந்து உள்ளார்கள் என்பதும் தெரிந்ததே. குறிப்பாக கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து மிக அதிகமாக கூகுள் மைக்ரோசாப்ட் உள்ளிட்ட பல பெரிய நிறுவனங்களும் ஏராளமான ஸ்டார்ட் அப் நிறுவனங்களும் பணிநீக்க நடவடிக்கையை எடுத்து வருகின்றன.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னால் பத்தாயிரம் ஊழியர்களை வேலை நீக்கம் செய்த மைக்ரோசாப்ட் நிறுவனம் தற்போது வாஷிங்டன் மாநிலத்தில் உள்ள இரண்டு அலுவலகங்களில் இருந்து 559 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது. வாஷிங்டன் மாநில வேலை வாய்ப்பு பாதுகாப்பு துறையிடம் அனுமதி பெற்றதை அடுத்து பணி நீக்க நடவடிக்கை செய்யப்பட்டுள்ளதாகவும் ஊழியர்களுக்கு தகுந்த நிவாரண தொகை அனுப்பப்படும் என்றும் மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது.
இது குறித்து மைக்ரோசாப்ட் செய்தி தொடர்பாளர் கூறியபோது கடந்த ஜனவரியில் வருவாய் மிகவும் குறைந்துள்ளதும் செலவு கட்டமைப்பு அதிகரித்து உள்ளது என்றும், எனவே வேலைநீக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றும் நிறுவனத்தை சீரமைக்கும் முயற்சியில் இது ஒரு பகுதி என்றும் தெரிவித்தார்.
மேலும் 2023 ஆம் ஆண்டு பணிநீக்கம் இன்னும் தொடர வாய்ப்பு இருப்பதாகவும் செயற்கை நுண்ணறிவு மற்றும் இன்டர்நெட் பகுதியைச் சேர்ந்தவர்கள் பணி நீக்கம் செய்யப்படுகிறார்கள் என்றும் தெரிவித்தார். மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் மொத்தம் 2 லட்சத்து 20 ஆயிரம் பணியாளர்கள் பணிபுரிந்து வரும் நிலையில் தற்போது 5% பணியாளர்கள் இதுவரை வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.