சினிமா
விக்னேஷ்சிவன் இயக்கும் படத்தில் பிரதீப்புடன் இணைகிறாரா நயன்தாரா?

விக்னேஷ்சிவன் இயக்கும் புதிய படத்தில் நடிகை நயன்தாரா இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இயக்குநர் விக்னேஷ்சிவன் முன்பு நடிகர் அஜித்தின் 62வது படத்தை இயக்குவார் என அறிவிக்கப்பட்டது. ஆனால், தயாரிப்பு நிறுவனமான லைகாவிற்கு அவர் கதையில் திருப்தி இல்லாததால் அந்தப் படத்தில் இருந்து விக்னேஷ்சிவன் விலகி விட்டார். அவருக்கு பதிலாக இப்போது மகிழ் திருமேனி அஜித்தின் 62வது படத்தை இயக்க இருக்கிறார்.
இப்போது விக்னேஷ்சிவன் தன்னுடைய ஆறாவது படத்திற்காக பிரதீப் ரங்கநாதனை வைத்து இயக்க இருக்கிறார். முழுக்க முழுக்க காதல் கதையாக உருவாக இந்தப் படம் குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக பிரியங்கா அருள்மோகனை நடிக்க வைக்கப் பேச்சுவார்த்தை நடக்கிறது. ஆனால், படத்திற்கு கூடுதல் கவனம் தேவைப்படுகிறது என்பதால் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நயன்தாராவை நடிக்கக் கேட்டிருக்கிறார்கள்.
மேலும், இதற்கு முன்பு ‘நானும் ரெளடிதான்’, ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ உள்ளிட்டப் படங்களில் விக்னேஷ்சிவனுடன் இணைந்த அனிருத் நான்காவது முறையாக இந்தப் படத்திலும் விக்னேஷ்சிவனுடன் இணைய இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ’லவ் இன்ஷூரன்ஸ் கார்ப்பரேஷன்’ எனத் தலைப்பிடப்பட்ட இந்தக் கதையை முதலில் விக்னேஷ்சிவன் சிவகார்த்திகேயனை வைத்தே இயக்கத் திட்டமிட்டிருந்தார்.
ஆனால், தற்போது அது பிரதீப் ரங்கநாதனுக்கு மாறி இருக்கிறது. விரைவில் இந்தப் படம் குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தலைப்பு ஆகியவற்றை எதிர்ப்பார்க்கலாம்.