சினிமா
நம்பி நாராயணனை தொடர்ந்து ஜிடி நாயுடுவாக மாறும் மாதவன்!

நடிகர் மாதவனுக்கு அறிவியல் ரீதியான படங்களில் நடிக்க திடீரென ஆர்வம் அதிகரித்துள்ளது. நம்பி நாராயணன் எனும் இந்திய விஞ்ஞானி வாழ்க்கையில் பட்ட கஷ்டங்களையும் தேசத் துரோகி என முத்திரை குத்தப்பட்ட வரலாற்றையும் ராக்கெட்ரி: நம்பி விளைவு என்கிற பெயரில் இயக்கி நடித்திருந்தார்.
அந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பும் மாதவனின் இயக்கம் மற்றும் நடிப்புக்கு பாராட்டுக்களும் குவிந்தன.

இந்நிலையில், அடுத்ததாக பிரபல விஞ்ஞானி ஜிடி நாயுடுவின் பயோபிக்கில் மாதவன் நடித்து வருகிறார். அதன் அட்டகாசமான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி ரசிகர்களை மெய் சிலிர்க்க வைத்துள்ளது.
சாக்லெட் பாயாக வலம் வந்த மாதவன் சமீப காலமாக சயின்டிஸ்ட்டாக வலம் வருகிறாரே என ரசிகர்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர். இந்த படம் குறித்த கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தையும் மாதவனே இயக்கி நடிக்கப் போகிறாரா என்கிற கேள்விகளையும் ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர். தமிழ், இந்தி மொழிகளில் பிசியாக நடித்து வரும் மாதவன் இந்த படத்தையும் பான் இந்தியா படமாக உருவாக்க உள்ளார்.
கோவையை சேர்ந்த தலை சிறந்த அறிவியல் மேதை ஜிடி நாயுடுவின் மறைக்கப்பட்ட வாழ்க்கை மற்றும் சாகசங்கள் இந்த படத்தின் மூலம் வெளியே வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.



















