சினிமா
சூர்யா 42 டைட்டில் எப்போ ரிலீஸ் தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ!

இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா, திஷா பதானி நடிப்பில் உருவாகி வரும் சூர்யா 42 படத்தின் தலைப்பு மற்றும் ரிலீஸ் தேதி வரும் ஏப்ரல் 14ம் தேதி தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வேறு ஒரு தேதியில் இந்த அறிவிப்பு வெளியாகும் என்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
கார்த்தியை வைத்து சிறுத்தை படத்தை இயக்கிய இயக்குநர் சிவா அடுத்த படமே சூர்யாவை வைத்து இயக்க இருந்தார். ஆனால், அதற்குள் அஜித்தின் வீரம் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்த நிலையில், அங்கே சென்றவர் தொடர்ந்து அஜித்துடன் ஏற்பட்ட நல்ல நட்பு காரணமாக வீரம், வேதாளம், விவேகம் மற்றும் விஸ்வாசம் என 4 படங்களை அடுத்தடுத்து இயக்கி அசத்தினார்.

இதில், விவேகம் படம் மட்டுமே சொதப்பினாலும், அடுத்ததாக விஸ்வாசம் எனும் பிளாக்பஸ்டர் படத்தை கொடுத்து அஜித்தின் நம்பிக்கையை கெடுக்காமல் பார்த்துக் கொண்டார் சிறுத்தை சிவா.
பேட்ட படத்துடன் மோதிய விஸ்வாசம் படத்தின் வெற்றியை பார்த்த ரஜினிகாந்த், நமக்கும் ஒரு கமர்ஷியல் ஹிட் கொடுப்பார் சிவா என நம்பி அண்ணாத்த படத்தில் நடித்த நிலையில், அந்த படம் படு தோல்வியை சந்தித்தது.

இந்நிலையில், சூர்யாவின் 42வது படத்தை 10 மொழிகளில் 3டியில் பிரம்மாண்டமாக சிறுத்தை சிவா உருவாக்கி வருகிறார். வரும் ஏப்ரல் 16ம் தேதி காலை 9.05க்கு ஷார்ப்பா சூர்யாவின் 42வது படத்தின் டைட்டில் மற்றும் ரிலீஸ் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.
அதற்கு முன்னதாகவே இந்த படத்தின் டைட்டில் அக்னீஸ்வரன் என்கிற தகவல்களும் கசிந்து வைரலாகி வருகிறது. அதே டைட்டிலை தான் அறிவிக்கப் போகின்றனரா அல்லது வேறு ஏதாவது டைட்டில் இருக்குமா? என்பதை அறிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.