சினிமா
அஜித் படத்தில் தமிழில் அறிமுகமாக உள்ள ஸ்ரீதேவியின் மகள்!

நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து அஜித் நடிக்க உள்ள படத்தில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் தமிழில் அறிமுகமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
போனிகபூர் தயாரிப்பில் எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள நேர்கொண்ட பார்வை திரைப்படம் வரும் ஆகஸ்ட் 8-ஆம் தேதி வெளியாகிறது. இந்நிலையில் படக்குழுவுக்கு நன்றியை டுவிட்டரில் தெரிவித்த தயாரிப்பாளர் போனி கபூர் தான் அடுத்தாக அஜித்தை வைத்து தயாரிக்கப் போகும் படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவலை தெரிவித்தார். அந்த படத்தையும் எச். வினோத் இயக்குவார் என்ற அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார்.
ஆகஸ்ட் மாத இறுதியில் இந்த புதிய படத்திற்கான பூஜை போடப்படும் என்று கூறிய போனி கபூர் படத்தில் நடிக்க உள்ள நடிகர், நடிகைகள் குறித்து கூறவில்லை. இந்த படம் முழுக்க முழுக்க அஜித் ரசிகர்களுக்கான ஆக்ஷன் படமாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்நிலையில் போனி கபூரின் மகள் ஜான்வி கபூர் இந்த புதிய படத்தில் அறிமுகமாகவுள்ளார் என்ற தகவல் வெளிவந்துள்ளது.
ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூருக்கு அஜித் படம் சிறந்த அறிமுகமாகவும் அடையாளமாகவும் மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அவர் இந்தப் படத்தில் கதாநாயகியாக அல்லாமல் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் எனவும் கூறப்படுகிறது.



















