சினிமா செய்திகள்
முன்னாள் கணவர் மீது மோசடி புகார் அளித்த பிக்பாஸ் இசைவாணி!

பிக்பாஸ் சீசன் 5 போட்டியாளர்களில் ஒருவரான இசைவாணி தனது முன்னாள் கணவர் மீது சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் மோசடி புகார் ஒன்றைக் கொடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவர் இசைவாணி என்பதும் அவர் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த போதும் ஒருசில வாரங்களில் வெளியேற்றப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் கடந்து வந்த பாதை என்ற டாஸ்க்கில் பல்வேறு கஷ்டங்களை கூறினாலும் தனக்கு திருமணமாகி விவாகரத்து ஆனதை அவர் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது தனது முன்னாள் கணவர் மீது சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் பிக்பாஸ் இசைவாணி மோசடி புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில் தன்னுடைய முன்னாள் கணவர் தன்னுடைய பெயரை பயன்படுத்தி இசை நிகழ்ச்சியை நடத்தி வருவதாகவும், தன்னுடைய பெயரில் போலி சமூக வலைதளங்களை பக்கங்களை உருவாக்கி மோசடி செய்து வருவதாகவும் கூறியுள்ளார்.
மேலும் விவாகரத்து பெற்ற பின்னரும் தன்னை மனைவி என்று அவர் கூறி வருவதாகவும், தன்னுடைய திருமண புகைப்படத்தை அவர் தவறாக பயன்படுத்தி வருவதாகவும் அவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து தனது முன்னாள் கணவரிடம் கேட்டபோது, ‘அவர் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் அவர் புகாரில் தெரிவித்துள்ளார். இந்த புகார் குறித்து விரைவில் காவல்துறை விசாரணை நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












