தமிழ்நாடு
மனித வெடிகுண்டாக மாறுவோம்… ஆர்.பி.உதயகுமாரை கைது செய்ய திமுக புகார்!

எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதை கண்டித்து மதுரையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு பதிவு செய்யும் சர்வாதிகாரப்போக்கு தொடருமானால் அதிமுக தொண்டர்கள் மனித வெடிகுண்டாக மாறுவார்கள் என பேசினார். அவரின் இந்த பேச்சுக்கு திமுக சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

#image_title
மதுரை விமான நிலைய சம்பவத்தில் அமமுக நிர்வாகியின் புகாரின் பேரில், எடப்பாடி பழனிசாமி, அவரது உதவியாளர் கிருஷ்ணன், எம்எல்ஏ செந்தில்நாதன், முன்னாள் அமைச்சர் மணிகண்டன் உட்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் அமமுக பிரமுகரை தாக்கிய புகாரில் எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதைக் கண்டித்து மதுரையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்யும் சர்வாதிகார போக்கு தொடருமானால் மதுரையில் அதிமுக தொண்டர்கள் மனித வெடிகுண்டாக மாறுவார்கள். மதுரை அதிமுக தொண்டர்கள் ஜெயிலுக்கு போவதற்கு பயந்தவர்கள் இல்லை என பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வன்முறையை தூண்டும் விதமாக பேசியதால் அவரை கைது செய்யக்கோரி மதுரை சம்மட்டிபுரம் திமுக பகுதி கழக செயலாளர் தவமணி சுப்பிரமணியபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.