தமிழ்நாடு
அமமுக புகாரில் ஈபிஎஸ் மீது வழக்கு பதிவு: அதிமுக கண்டன போராட்டம்!

நேற்று முன்தினம் மதுரை வந்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை விமான நிலையத்தில் வைத்து வீடியோ எடுத்து துரோகத்தின் அடையாளம் எடப்பாடி என கோஷமிட்ட அமமுக நிர்வாகி ராஜேஸ்வரனின் செல்ஃபோனை பறித்து அவரை அதிமுகவினர் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு அதிமுக கண்டன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.

#image_title
சிவகங்கையில் நடைபெற்ற ஜெயலலிதாவின் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள விமானம் மூலம் மதுரை வந்தார் எடப்பாடி பழனிசாமி. அப்போது அங்கு வந்த அமமுக நிர்வாகி ராஜேஸ்வரன், எடப்பாடி பழனிசாமியை பார்த்து ஆத்திரமடைந்து, அவருக்கு எதிராக கோஷமிட்டு வீடியோ எடுத்து ஃபேஸ்புக்கில் லைவ் செய்தார். இதனை பார்த்த எடப்பாடி பழனிசாமியின் பாதுகாவலர் அவரிடம் இருந்த செல்ஃபோனை பறித்தார்.
பின்னர் அவரை விமான நிலைய வளாகத்தில் சட்டை பிடித்து இழுத்து வந்தார். அங்கிருந்து அதிமுகவினர் சிலர் அமமுக நிர்வாகி ராஜேஸ்வரனை தாக்கிய வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியது. இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமியை அவதூறாக பேசியதாக காவல்துறையில் ராஜேஸ்வரன் மீது புகார் அளிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அதேப்போல் ராஜேஸ்வரனும் முகநூலில் எடப்பாடி பழனிசாமி குறித்து பேசிய போது, அவரது நேர்முக உதவியாளர் கிருஷ்ணன் தன்னை தாக்கி செல்ஃபோனை பறித்ததாகவும், எடப்பாடி பழனிசாமி தூண்டுதலின் பேரில் அவரது உதவியாளர் மற்றும் முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் தகாத வார்த்தைகளால் பேசி தன் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறி புகார் அளித்தார்.
இந்த புகாரின் பேரில், எடப்பாடி பழனிசாமி, அவரது உதவியாளர் கிருஷ்ணன், எம்எல்ஏ செந்தில்நாதன், முன்னாள் அமைச்சர் மணிகண்டன் உட்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அமமுக பிரமுகரை தாக்கிய புகாரில் எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதைக் கண்டித்து மதுரையில் அதிமுகவினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
மதுரை விமானநிலைய சம்பவத்தின்போது எடப்பாடி பழனிசாமி மிகவும் அமைதியாக இருந்தார், தற்போதைய முதல்வரின் ஆலோசனையின் பேரில் எங்கள் தலைவர் எடப்பாடி மீது திட்டமிட்டுப் பொய் வழக்குப் போட்டு உள்ளனர். இது காவல்துறையால் ஜோடிக்கப்பட்டது என்று கூறி அதிமுகவினர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மதுரையில் நடந்து வரும் இந்த ஆர்ப்பட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் மற்றும் எம்எல்ஏ ராஜன் செல்லப்பா மற்றும் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர்.