இந்தியா
மொபைல்போன் தொலைந்துவிட்டால் உடனே என்ன செய்ய வேண்டும்? இதோ அரசின் முக்கிய அறிவிப்பு..!

முன்பெல்லாம் மொபைல் போன் தொலைந்து விட்டால் அவற்றை கண்டுபிடிப்பது என்பது மிகவும் அரிதானது என்பதும் காவல்துறையினரிடம் புகார் அளித்தால் கூட IMEI எண் மூலம் கண்டுபிடிப்பது என்பது சவாலாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மொபைல் போன் தொலைந்து விட்டால் உடனே என்ன செய்ய வேண்டும் என்ற வழிமுறைகளை இந்திய அரசு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து பார்ப்போம்
மத்திய உபகரண அடையாளப் பதிவேடு (CEIR), போலி மொபைல் போன் சந்தையைக் குறைப்பதற்கான மைய அமைப்பு என்பதும், தொலைத்தொடர்புத் துறையால் இந்த அமைப்பு நிர்வகிக்கப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த அமைப்பு தற்போது இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் யூனியன் பிரதேசங்களிலும் செயல்பட்டு வருகிறது.
இதன்படி இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் வசிப்பவர்கள் தங்கள் ஸ்மார்ட்ஃபோன்களை தொலைத்தால் உடனே இந்த தளத்தை பயன்படுத்தி தங்கள் மொபைல்போன் இருக்கும் இடத்தை தெரிந்து கொள்ளலா. CEIR தரவுத்தளத்தின்படி, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் இந்த வசதியை மார்ச் 15 அன்று பெற்றன. செப்டம்பர் 2019ஆம் ஆண்டு இந்த அமைப்பு முதன்முதலில் மகாராஷ்டிராவில் உள்ள தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி, மற்றும் கோவா ஆகிய பகுதிகளில் தொடங்கப்பட்டது. பின்னர் டிசம்பர் 2019 இல் டெல்லிக்கும் சேவையை விரிவுபடுத்தியது. இந்தியாவின் மீதமுள்ள பகுதிகளில் விரிவாக்கம் செய்ய முயன்றபோது கோவிட்-19 தொற்றுநோய் பரவியதால் காலதாமதம் ஆனது.
இந்த நிலையில் CEIR ஐப் பயன்படுத்த, பயனர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லலாம். அல்லது Android மற்றும் iOSக்கான CEIR பயன்பாட்டை டவுன்லோடு செய்தும் பயன்படுத்தலாம். பயனர்கள் தங்கள் மொபைலின் IMEI எண்ணை முதலில் சமர்பிக்க வேண்டும். எனவே ஒவ்வொரு மொபைல் வாடிக்கையாளர்களும் தங்களுடைய IMEI எண்ணை முதலில் தெரிந்து வைத்து கொள்ளுங்கள். IMEI எண்ணைப் பெற உங்கள் மொபைலில் *#06# என டயல் செய்தால் போதும்,.
உங்கள் ஆண்ட்ராய்டு ஃபோன் அல்லது ஐபோன் தொலைந்துவிட்டால் CEIR ஐ எப்படி பயன்படுத்துவது? என்பது குறித்து தற்போது பார்போம். மொபைல் போனை தொலைத்த நபர் CEIR இணையதளத்தில் முதலில் புகார் செய்ய வேண்டும். புகார் செய்யும் போது மொபைல் எண் மற்றும் சில ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். புகார் அளித்தவுடன் மொபைல்போன் வேலை செய்யாது. திருடன் சிம் கார்டை மாற்றினாலும் வேலை செய்யாது என்பது குறிப்பிடத்தக்கது.
அதன்பின் இந்த புகாரின் நகலை உடனே அருகிலுள்ள நிலையத்தில் FIR பதிவு செய்ய வேண்டும். பின்னர், இணையதளம் மற்றும் ஆப்ஸில் கிடைக்கும் ஆன்லைன் படிவத்தை நிரப்பவும். படிவத்தில் உள்ள சில கட்டாய புலங்களில் மொபைல் எண், மாடல் எண், IMEI 1 மற்றும் 2 எண்கள் மற்றும் இருப்பிடத் தகவல் ஆகியவற்றை பதிவு செய்து காவல்துறையின் FIR காப்பியையும் ஸ்கேன் செய்து பதிவு செய்ய வேண்டும்.
இவை அனைத்தையும் வெற்றிகரமாகச் சமர்ப்பித்த பிறகு, பயனரின் தொலைபேசி 24 மணி நேரத்திற்குள் செயல்படுவது தடுக்கப்படும். மொபைல்போன் செயல்படுவது தடுக்கப்பட்ட பிறகு, இந்தியா முழுவதும் உள்ள எந்த நெட்வொர்க்கிலும் அதைப் பயன்படுத்த முடியாது. உங்கள் ஃபோன் ஒருவேளை கண்டுபிடிக்கப்பட்டால், நீங்கள் சாதனத்தைத் தடைநீக்க வேண்டும். CEIRக்கு தடைநீக்கும் விருப்பம் உள்ளது. அந்த கோரிக்கையை உங்கள் ஐடி மற்றும் பிற விவரங்களைச் சமர்ப்பித்தால் மீண்டும் மொபைல்போன் வேலை செய்யும்.