தமிழ்நாடு
திருட்டு ரயிலே ஏறி வந்தாலும் அரியணையில் ஏற்றி அழகு பார்ப்போம்: நடிகை கஸ்தூரி சர்ச்சை கருத்து!

தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக கடந்த சில தினங்களாக போலி வீடியோக்களும் செய்திகளும் பரவி வருகிறது. இந்த பிரச்சனை தமிழகத்தில் பூதாகரமாக வெடித்துள்ளது. இதனால் வதந்தி பரப்புவோருக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும் என தமிழக காவல்துறை எச்சரித்துள்ளது. இந்த விவகாரத்தில் நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ள கருத்து ஒன்றை தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

#image_title
வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக கூறப்படும் இந்த விவகாரம் தொடர்பாக ஆய்வு செய்ய ஒரு குழுவை தமிழகத்துக்கு அனுப்பி வைத்துள்ளது பீகார் அரசு. நிலைமையின் தீவிரம் அந்த அளவுக்கு உள்ளது. தேசிய பிரச்சனையாகவே இது உருவாகி விட்டது. இந்நிலையில் இந்த பொய்யான வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தமிழக காவல்துறையும், தமிழக அரசும் துரித நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
தமிழக முதல்வர் ஸ்டாலினும் இதற்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இந்த விவகாரத்தில் குரல் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் நடிகை கஸ்தூரி இந்த விவகாரத்தில் சர்ச்சைக்குறிய கருத்து ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், வடநாட்டவர்களை தமிழர்கள் தாக்குகிறார்கள் என்பதெல்லாம் மிகை. இது வந்தோரை வாழவைக்கும் தமிழ்நாடு. தெலுங்கர், வடுகர், மலையாளி, மைசூர் என யாராயிருந்தாலும், திருட்டு ரயிலே ஏறி வந்தாலும் அரியணையில் ஏற்றி அழகு பார்ப்போமேயன்றி அடித்து துரத்துவதில்லை என கூறியுள்ளார். இவரது இந்த சர்ச்சை பதிவுக்கு பல திமுகவினர் பதிலடி கொடுத்து வருகின்றனர்.