இந்தியா
வங்கக்கடலில் நாளை உருவாகிறது புயல்: கரையை கடப்பது எங்கே?

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகி இருப்பதாக ஏற்கனவே இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்த நிலையில் தற்போது நாளை வங்க கடலில் புதிய புயல் உருவாக இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் அந்தமான் அருகே காற்றழுத்த தாழ்வு உருவாகியுள்ளதாகவும் இந்த காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக வலுப்பெறும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த புயல் ஆந்திரா மற்றும் ஒரிசா மாநிலங்களில் இடையே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் இரு மாநிலத்திற்கும் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளதாகவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆந்திரா மற்றும் ஒரிசா இடையே புயல் கரையை கடந்தாலும் தமிழக கடலோர பகுதிகளிலும் நல்ல மழை இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தற்போது கோடை வெயில் கொளுத்தி வருகிறது என்பதும் பல மாவட்டங்களில் 100 டிகிரிக்கும் அதிகமாக வெயில் அடித்து வரும் நிலையில் வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள புயல் காரணமாக மழை பெய்யும் என்ற தகவல் பொது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.





