ஆன்மீகம்
சிவாலயங்களில் சொக்கப்பனை ஏன் கொளுத்தப்படுகிறது?

திருக்கார்த்திகை தினத்தன்று அனைத்து சிவாலயங்களிலும் சொக்கப்பனை கொளுத்தப்படுகின்றது.
சொக்கன்+பனை=சொக்கப்பனை. சொக்கன் என்றால் இறைவன் ஈஸ்வரனைக் குறிக்கும்.
பனை மரத்தின் கழி மற்றும் பனை ஓலைகளைக் கொண்டு கூம்பு வடிவில் அமைத்து,சொக்கனாகிய சிவபெருமானை ஜோதி வடிவில் வழிபடுவதால் இதற்கு சொக்கப்பனை என்று பெயர் வந்தது. பேச்சு வழக்கில் சிலர் இதை சொக்கப்பானை என சொல்வதுண்டு.
முன்னோர் காலத்தில் 15 அடி உயர பனை மரத்தை வெட்டிக் கொண்டு வந்து கோவில் வாசல் முன்பு அதை நட்டு வைத்து அதைச் சுற்றி பனை ஓலைகளைக் கட்டி கூம்பு வடிவில் அமைத்து உச்சியில் நெருப்பு வைப்பார்கள். மேலிருந்து கீழே கொஞ்சம் கொஞ்சமாக நெருப்பு எரிந்து வரும்
ஜோதி தரிசனம்.
பிரம்மா மற்றும் விஷ்ணு சிவபெருமானின் அடி முடி காண வேண்டி நிற்கும் போது, சிவபெருமானின் ஆதியும் அந்தமும் இல்லாத பரம் பொருளாய் அடி முடி காண இயலாத தீப் பிழம்பாக காட்சியளித்ததை நினைவு கூரும் வகையில், சிவன் கோவில் வாசலில் பஞ்சமூர்த்திகள் முன்னிலையில் இந்த சொக்கப்பனை ஆவாகனம் செய்யப் பட்டு கொளுத்தப்
படுகின்றது.
சொக்கப்பனையை கொளுத்துவதற்கு முன்பாக இறைவன் சிவபெருமானுக்கு உரிய பூஜைகளை செய்து விட்டு இறைவனுக்கு ஏற்றிய தீபத்தைக் கொண்டு வந்து சொக்கப்பனை கொளுத்தப் படுகின்றது. சொக்கப்பனை தீப்பிழம்பாக மாறும்பொழுது சில பெருமான் வடிவான தீப்பிழம்பிற்கு உரிய பூஜைகளைச் செய்து சிவ கோஷங்களை எழுப்பி இறைவனை ஜோதி வடிவில் வழிபட வேண்டும்.இதுவே,சொக்கப்பனை கொளுத்துவதன் சூட்சுமமாகும்.திருக் கார்த்திகை அன்று வீடுகள் மற்றும் வியாபார ஸ்தலங்கள் வாசல்களிலும் சொக்கப்பனை கொளுத்துவதுண்டு. திருக்கார்த்திகை அன்று கொளுத்தப்படும் சொக்கப்பனையில் உப்பு,வத்தல் இவை போன்ற எந்த ஒரு பொருளையும் அதில் இடுதல் கூடாது. எரிந்து முடிந்த பின் சாம்பலை துடைப்பத்தால் பெருக்கக் கூடாது.
திருக்கார்த்திகை அன்று ஏன் சொக்கப்பனை கொளுத்தப் படுகின்றது என்பதன் காரணம் தெரிந்து கொள்வோம்.
கோள் மண்டலத்தில் சூரியன் விருச்சிக ராசியில் சஞ்சரிக்கும் மாதமே கார்த்திகை ஆகும். கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நட்சத்திரமும் பௌர்ணமி திதியும் சேர்ந்து வருவது திருக் கார்த்திகை ஆகும். கார்த்திகை நட்சத்திரம் சூரியனின் நட்சத்திரமாகும். சூரியனின் அதிதேவதை சிவபெருமான் ஆவார்.
விருச்சி ராசிக்கு நேர் எதிரே உள்ள ராசி ரிஷபம் ஆகும். இந்நாளில் சந்திரன் கார்த்திகை நட்சத்திரத்தில் சஞ்சரிக்கின்றார். கார்த்திகை நட்சத்திரமும் நெருப்பு. சூரியனும் நெருப்பு. சிவபெருமானும் நெருப்பு.சூரியனுக்கு நேர் எதிரே அதாவது 180 டிகிரியில் சந்திரன் சஞ்சரிக்கும் போது தான் பௌர்ணமி நிகழ்கின்றது. பௌர்ணமி அன்று சந்திரன் சூரியனின் முழு ஒளியையும் பெற்று பூரணமாக பிரகாசிக்கின்றார். எனவே கார்த்திகை மாதத்தில் கார்த்தி நட்சத்திரமும் பௌர்ணமி திதியும் இணைந்து வரும் நாளில் சிவபெருமானை ஜோதி வடிவில் வணங்கி வழிபடுவது மரபாக உள்ளது. முருகன் ஆலயங்களிலும் திருக்கார்த்திகை நாளில் முருகன் கோவில்களில் முருகனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றது. முருகப்பெருமான் கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டமையால் சிவபெருமானின் கார்த்திகைப் பெண்களுக்குக் கொடுத்த வரத்தின் படி கார்த்திகை நட்சத்திர நாளில் முருகப்பெருமானை வழிபடுவதன் மூலம் முருகப்பெருமானின் அருட் கடாட்சமும் கிட்டும்.சிவபெருமானின் அருட் கடாட்சமும் சமம் கிட்டும்.
