ஆன்மீகம்
நவகிரக கோயில்கள் தரிசனம் அரை நாளிலா? பக்தர்களுக்கான பரவச ஆன்மீகப் பயணம்

தமிழகத்தில் நவகிரக பரிகார ஸ்தலங்கள் என்று சொன்னால் நம் எல்லோருக்கும் நினைவுக்கு வருவது கும்பகோணம்தான்.
ஆன்மீக பயணங்களில் நவகிரகங்களை அடிப்படையான கோயில் சுற்றுலா பகுதிகள் பல இருக்கின்றன. எங்கெங்கே? வாங்க பார்ப்போம்.
1.கும்பகோணத்தை சுற்றியுள்ள பகுதிகளில் பிரசித்தி பெற்ற நவகிரக ஆலயங்கள் உள்ளன.
2.தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியை ஒட்டி நவ திருப்பதி என்ற ஒன்பது பெருமாள் கோணில்கள் உள்ளன. இங்கு வைகாசி மாத்தில் ஒன்பது கருட சேவைகள் ஒரே இடத்தில் நடைபெறுவது சிறப்பு.
3.சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பகுதியை ஒட்டி நவ வைரவர் ஆலயங்கள் உள்ளன.
- இராமநாதபுரம் மாவட்டத்தில் தேவிபட்டினத்தில் கடலுக்குள்ளே நவகிரக கோயில் ஒன்று அமைந்துள்ளது.
5.திருவாரூர் சிவன் கோயிலில் நவகிரகங்களும் ஒரே நேர்க்கோட்டில் வக்கிரமாக அமைந்துள்ளதும் விசேஷமானது.
இப்போது நாம் காண இருப்பது காஞ்சிபுரத்தில் உள்ள நவக்கிரக பரிகாரக ஸ்தலங்கள் தான். .
பலருக்கும் தெரியாத ஒரு அதிசயம் என்னவென்றால், மிகப் பழமையான நவகிரக பரிகார ஸ்தலங்கள் அனைத்தும் தமிழ்நாட்டின் இரண்டு பெரிய கோவில் நகரங்களான கும்பகோணம் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய இரண்டு நகரஙகளிலும் அமைந்திருப்பது விசேஷமானதாக்க் கருதப்படுகிறது. கும்கோணம் நவக்கிரக கொயில்கள் பற்றி நம் அனைவருக்கம் தெரியும். நாமெல்லாரும் பலமுறை அங்கேயெல்லாம் சென்ற வந்திருப்போம். இப்போது நாம் காண இருப்பது சென்னைக்கு மிக அருகில் உள்ள காஞ்சிபுரம்.
பண்டைய காலங்களில் இந்த காஞ்சிபுரம் நகரம் “தேவலோக நகரம்” என்று போற்றப்பட்ட ஆயிரக்கணக்கான கோவில்களால் புகழ்பெற்ற புனித நகரம். இந்த நகரத்தின் பல்வேறு பகுதிகளில் ஒன்பது கிரகங்களுக்கான தனித்தனி சிவாலயங்கள் அமைந்துள்ளன. சரியான முறையில் திட்டமிட்டால், இந்த ஒன்பது கோவில்களையும் அரை நாளுக்குள் தரிசிக்க முடியும் என்பது பக்தர்களுக்கு மிகப்பெரிய ஆன்மீக அனுபவமாகும்.
இந்த காஞ்சிபுரம் நவகிரக தரிசனத்தை எப்படி தொடங்குவது என்று உங்களுக்குத் தெரியுமா?
காஞ்சிபுரத்தில் உள்ள சில கோவில்கள் காலை வேளைகளில் மட்டும் பூஜைக்காக திறக்கப்படுகின்றன. எனவே இந்த யாத்திரையை செய்ய விரும்பும் பக்தர்கள் காலை 7 மணிக்குள் காஞ்சிபுரத்தில் இருக்கும்படி திட்டமிட வேண்டும். அப்படி தொடங்கினால் பிற்பகல் 12.30 மணிக்குள் ஒன்பது நவகிரக ஸ்தலங்களையும் தரிசித்து முடிக்கலாம்.
இப்போது அந்த புனித தரிசனப் பயணத்தை ஒவ்வொன்றாக பார்க்கலாம்.
- சூரியன் பரிகார ஸ்தலம் – ஸ்ரீ பரிதீஸ்வரர் திருக்கோவில்
இந்த தரிசனப் பயணம் தொடங்க வேண்டிய முதல் ஸ்தலம் பெரிய காஞ்சிபுரத்தில் உள்ள ஸ்ரீ பரிதீஸ்வரர் திருக்கோவில் ஆகும்.
இந்த கோவில் ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர் கோவிலின் பின்புறப் பகுதியில் அமைந்துள்ளது. இங்கு சிவபெருமான் பரிதீஸ்வரராக காட்சி தருகிறார். சூரியன் தொடர்பான தோஷங்களை நீக்கி ஆரோக்கியம், புகழ், வளர்ச்சி கிடைக்க இந்த தலம் சிறப்பானதாக கருதப்படுகிறது.
காலை 7 மணி முதல் 7.30 மணிக்குள் இந்த கோவிலை முதலில் தரிசிக்க வேண்டும்.
- செவ்வாய் பரிகார ஸ்தலம் – ஸ்ரீ செவ்வந்தீஸ்வரர் திருக்கோவில்
பரிதீஸ்வரர் கோவிலுக்கு அருகிலேயே செவ்வாய் கிரகத்திற்கு பரிகார ஸ்தலமான ஸ்ரீ செவ்வந்தீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது.
செவ்வாய் தோஷம் காரணமாக திருமணம் தாமதம், குடும்ப பிரச்சனைகள் போன்றவை ஏற்படுவதாக நம்பிக்கை உள்ளது. இந்த தலத்தில் சிவபெருமானை வழிபட்டால் அந்த தோஷங்கள் குறையும் என்று பக்தர்கள் நம்புகின்றனர்.
- சந்திரன் பரிகார ஸ்தலம் – ஸ்ரீ சந்திரேஸ்வரர் திருக்கோவில்
அடுத்ததாக பக்தர்கள் பிள்ளையார்பாளையம் பகுதியில் உள்ள ஸ்ரீ சந்திரேஸ்வரர் திருக்கோவிலுக்கு செல்ல வேண்டும். இந்த கோவில் சந்தவெளி அம்மன் கோயிலின் பின்புறத் தெருவில் அமைந்துள்ளது. மன அமைதி, மன அழுத்தம் நீங்குதல், குடும்ப ஒற்றுமை ஆகியவற்றிற்கு இந்த சந்திர ஸ்தலத்தில் வழிபடுவது சிறப்பாக கருதப்படுகிறது.
- குரு பரிகார ஸ்தலம் – ஸ்ரீ காயாரோகணீஸ்வரர் திருக்கோவில்
சந்திரேஸ்வரர் கோவிலுக்கு அருகிலேயே முடங்கு வீதியில் ஸ்ரீ காயாரோகணீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இங்கு சிவபெருமான் குரு பகவானுக்கான பரிகார ஸ்தலமாக அருள்பாலிக்கிறார். கல்வி, அறிவு, திருமண யோகம், நல்ல ஆசான் கிடைப்பது போன்ற பலன்களுக்காக இந்த தலத்தில் பக்தர்கள் வழிபடுகின்றனர்.
- ராகு – கேது பரிகார ஸ்தலம் – ஸ்ரீ பணாமுடீஸ்வரர் திருக்கோவில்
அடுத்ததாக பக்தர்கள் கீரை மண்டபம் பகுதியில் உள்ள ஆலடி பிள்ளையார் கோவில் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ பணாமுடீஸ்வரர் திருக்கோவிலுக்கு செல்ல வேண்டும்.
ராகு மற்றும் கேது தொடர்பான தோஷங்களை நீக்க இந்த தலம் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.
- புதன் பரிகார ஸ்தலம் – ஸ்ரீ சத்யநாதர் ஸ்வாமி திருக்கோவில்
பிறகு திருக்காலிமேடு பகுதியில் உள்ள ஸ்ரீ சத்யநாதர் ஸ்வாமி திருக்கோவிலுக்கு செல்ல வேண்டும். இந்த தலம் புதன் பகவானுக்கான பரிகார ஸ்தலம் ஆகும். கல்வி, அறிவு, பேச்சுத்திறன், வியாபாரம் வளர்ச்சி ஆகியவற்றிற்கு புதன் அருள் அவசியம் என்று ஜோதிடர்கள் கூறுகின்றனர்.
- சனி பரிகார ஸ்தலம் – ஸ்ரீ மணிகண்டீஸ்வரர் திருக்கோவில்
அடுத்ததாக சின்ன காஞ்சிபுரத்தில் உள்ள ஸ்ரீ மணிகண்டீஸ்வரர் திருக்கோவிலுக்கு செல்ல வேண்டும். இந்த தலம் சனி பகவானுக்கான பரிகார ஸ்தலம் ஆகும். வாழ்க்கையில் வரும் தடைகள், சிரமங்கள், சனி தோஷங்கள் நீங்க இங்கு பக்தர்கள் வழிபடுகின்றனர்.
- ராகு – கேது பரிகார ஸ்தலம் – ஸ்ரீ மாகாளேஸ்வரர் திருக்கோவில்
பிறகு பக்தர்கள் காமாட்சி அம்மன் கோவிலுக்கு அருகில் உள்ள ஸ்ரீ மாகாளேஸ்வரர் திருக்கோவிலுக்கு சென்று தரிசனம் செய்ய வேண்டும்.
இந்த தலம் ராகு–கேது தோஷ நிவாரணத்திற்கு மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.
- சுக்கிரன் பரிகார ஸ்தலம் – ஸ்ரீ இஷ்ட சித்தீஸ்வரர் திருக்கோவில்
இந்த ஆன்மீக யாத்திரையின் கடைசி தரிசனம் ஸ்ரீ கச்சபேஸ்வரர் கோவிலுக்குள் அமைந்துள்ள ஸ்ரீ இஷ்ட சித்தீஸ்வரர் திருக்கோவில் ஆகும். இங்கு சிவபெருமான் சுக்கிரன் பரிகார ஸ்தலமாக அருள்பாலிக்கிறார். செல்வம், வளம், குடும்ப மகிழ்ச்சி, வாழ்க்கை முன்னேற்றம் ஆகியவற்றிற்கு சுக்கிரன் அருள் முக்கியம் என்று நம்பப்படுகிறது.

இவ்வாறு பக்தர்கள் காலை 7 மணிக்கு தொடங்கி பிற்பகல் 12.30 மணிக்குள் இந்த ஒன்பது நவகிரக ஸ்தலங்களையும் தரிசித்து முடிக்க முடியும்.
இந்த யாத்திரையை மனம் நிறைந்த பக்தியுடன் செய்தால், கிரக தோஷங்கள் குறைந்து வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் ஏற்படும் என்று எல்லோரும் நம்புகின்றனர். நம்பிக்கையே வாழ்க்கை.
காஞ்சிபுரத்தின் இந்த அரைநாள் நவகிரக தரிசனம், பக்தர்களின் மனங்களுக்கு நிறைவான ஆன்மீக திருப்தியையும், ஆழ்ந்த மன அமைதியையும் அளிக்கும் ஒரு அரிய அனுபவமாக அமையும் என்பதில் ஐயமில்லை.





