வணிகம்
8வது ஊதியக்குழு: அடிப்படை ஆண்டு மாற்றம் திட்டமா? ஊதியத்தில் பெரிய மாற்றம் வருமா?

மத்திய அரசு ஊழியர்களுக்காக எதிர்பார்க்கப்படும் 8வது ஊதியக்குழு மே மாத தொடக்கத்தில் அமைக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது, குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமிக்க நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த ஊதியக் குழு, அகவிலைப்படி கணக்கீட்டில் முக்கிய மாற்றங்களை கொண்டு வரக்கூடும் என கூறப்படுகிறது. அதில் முக்கியமாக, தற்போது AICPI-IW குறியீட்டின் அடிப்படையில் கணக்கிடப்படும் அகவிலைப்படியின் அடிப்படை ஆண்டை (2016) மாற்ற அரசு திட்டமிட்டுள்ளதாக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
அடிப்படை ஆண்டு மாற்றம் ஏற்பட்டால், அகவிலைப்படி சதவீதம் கணக்கிடும் முறை, ஊதிய அமைப்பை முழுமையாக மாற்றும் வகையில் இருக்கும். இது 58% முதல் 61% வரை அகவிலைப்படி உயர வழிவகுக்கும் என நிபுணர்கள் கணிக்கின்றனர். அதன் மூலம் அகவிலைப்படி அடிப்படை சம்பளத்துடன் இணைக்கப்பட்டால், ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் பெரிய அளவில் சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
7வது ஊதியக் குழு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் அமலுக்கு வந்தது. அதன் பரிந்துரைகள் 2025 டிசம்பர் 31 வரை செல்லும். எனவே, 2026 ஜனவரி 1 முதல் 8வது ஊதியக்குழு பரிந்துரைகள் அமலுக்கு வர வேண்டும். இருப்பினும், அதன் இறுதி அறிக்கை 2027 முதல் மட்டுமே நடைமுறைக்கு வரலாம் என்றும், அதுவரை நிலுவைத் தொகையாக ஊழியர்களுக்கு வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.



