தமிழ்நாடு
பாதுகாப்பான இடம் கல்லறையும், தாயின் கருவறையும்தான்: தற்கொலை செய்த மாணவியின் உருக்கமான கடிதம்!

’பாதுகாப்பான இடம் தாயின் கருவறையும் கல்லறையும் தான்’ என சென்னையை சேர்ந்த 11ஆம் வகுப்பு மாணவி ஒருவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாலியல் தொல்லை காரணமாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் பலர் தற்கொலை செய்து கொண்டு வரும் துரதிருஷ்டமான சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று சென்னை மாங்காடு பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர் பாலியல் தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தற்கொலைக்கு முன் அவர் எழுதியுள்ள கடிதத்தில் ’பாதுகாப்பான இடம் கல்லறையும் தாயின் கருவறையும் தான் என்றும் ஆசிரியர்களின் உறவை யாரும் நம்பவேண்டாம் என்றும் அவர் தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை செய்துகொண்ட மாணவி பெண்கள் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்ததாகவும் நேற்று அவரது தந்தை வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டார் என்றும் தாய் கடைக்கு சென்று இருந்தபோது திடீரென மாணவி அறைக்குள் கதவு சாத்திக்கொண்டு நீண்ட நேரம் வரவில்லை என்றும் இதனை அடுத்து உறவினர்கள் உதவியுடன் கதவை தட்டி பார்த்தபோது மாணவி தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிகிறது.
தற்கொலை செய்த மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்தவுடன் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கடந்த சில நாட்களாக தனது தோழிகளிடம் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறியதாகவும் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தநிலையில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது யார்? மாணவியின் தற்கொலைக்கு காரணம் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.



















