உலகம்
78 வயது பிரபல தொழிலதிபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. அதிர்ச்சி செய்தி..!

அமெரிக்காவைச் சேர்ந்த 78 வயது தொழிலதிபர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் கோடீஸ்வரர் ஆன தாமஸ் லீ என்பவர் தனது 78வது வயதில் தனது அலுவலகத்திலேயே தன்னைத்தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. தாமஸ் லீ அந்நிய முதலீடுகள் வாங்குதல் மற்றும் தனியார் பங்கு முதலீட்டின் முன்னோடியாக கருதப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சம்பவம் நடந்த தினத்தில் தாமஸ் லீ மான்ஹாட்டன் அலுவலகத்திற்கு சுமார் 11.10 மணிக்கு வந்தார். அவர் தனது அறைக்கு சென்றதிலிருந்து தன்னிடம் எதுவுமே கேட்கவில்லை என்பதால் அவரது பெண் உதவியாளர் சந்தேகம் அடைந்து உள்ளே சென்று பார்த்தபோது அவர் கழிவறையில் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதனை அடுத்து அவர் உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றபோது அவர் காலமாகிவிட்டார் என மருத்துவர்கள் தெரிவித்ததால் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
தாமஸ் லீ குடும்ப நண்பர் மற்றும் செய்தி தொடர்பாளர் மைக்கேல் சிட்ரிக் என்பவர் இது குறித்து வெளியிட்ட அறிக்கையில் தாமஸ் லீ மரணத்தால் அவரது குடும்பம் மிகவும் வருத்தம் அடைந்துள்ளது. உலகம் அவரை ஒரு தனியார் பங்கு வணிகத்தின் முன்னோடிகளில் ஒருவராகவும் வெற்றிகரமான தொழில் அதிபராகவும் பார்த்திருந்தது. எப்போதும் தன்னுடைய தேவைகளை விட மற்றவர்களின் தேவைக்கு அவர் அதிக மதிப்பு கொடுப்பவர். ஒரு அர்ப்பணிப்புள்ள கணவராகவும், தந்தையாகவும், தாத்தாவும், நண்பராகவும் இருந்தவர் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
2006 ஆம் ஆண்டு லீ ஈக்யூடிட்டி என்ற நிறுவனத்தை நிறுவியவர் வெற்றிகரமாக அந்நிறுவனத்தை நடத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஹார்வர்டு பல்கலைக்கழகம் உள்பட்ட பல நிறுவனங்களுக்கு அவர் அறங்காவலராகவும் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 46 ஆண்டுகளில் 15 பில்லியனுக்கும் அதிகமான முதலீடுகளை செய்துள்ள கோடீஸ்வரர்களில் ஒருவர் என்பது கூறப்படுகிறது. அவரது மறைவு அமெரிக்க தொழில் அதிபர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.