Connect with us

ஆட்டோமொபைல்

கார் கண்ணாடியில் இந்த வாசகம் எழுதப்பட்டுள்ளது நோட் பண்ணியிருக்கீங்களா..? ஏன் தெரியுமா?

Published

on

நீங்கள் கார் ஓட்டும்போது, உங்கள் வலது பக்க கார் கண்ணாடியில் (ORVM- Outside Rear View Mirror) காணும் “Objects in the mirror are closer than they appear” என்ற எச்சரிக்கை வரியை பலமுறை பார்த்திருப்பீர்கள். ஆனால், அது ஏன் அங்கு எழுதப்பட்டுள்ளது? என்பது குறித்தும், அதன் பின்னால் இருக்கும் அறிவியல் காரணம் குறித்தும் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?. வாங்க அதுபற்றி இந்த செய்திகுறிப்பில் முழுமையாக தெரிந்துகொள்ளலாம்.

பொதுவாக, வலது பக்க வெளிப்புறப் பின்புறக் காட்சி கண்ணாடியில் குவிந்த அல்லது வளைந்த கண்ணாடிகள் (Convex Mirrors) பயன்படுத்தப்படுகின்றன. இவை, ஒரு கண்ணாடியின் பின்புறம் போல வெளியே நோக்கி வளைந்து காணப்படும். இந்த வளைந்த வடிவமைப்பு, கண்ணாடியின் பார்வைப் பரப்பை குறிப்பிடத்தக்க அளவில் விரிவாக்குகிறது. அதாவது, காருக்குப் பின்னால், வலது அல்லது இடது பக்கங்களில், தெரியாத பகுதிகளில் இருப்பதைக்கூடத் தெளிவாகக் காண முடியும். இதனால் ஓட்டுநரின் பார்வைப் பரப்பு பெரிதும் உயர்ந்து, பாதுகாப்பும் மேம்படுகிறது.

ஆனால், இந்த பரந்த பார்வை ஒரு சிறிய குறைபாட்டை உருவாக்குகிறது. வளைந்த கண்ணாடிகள், பொருட்களின் உருவத்தைச் சற்றுச் சிறிதாக்குகிறது. நீங்கள் அந்தக் கண்ணாடியில், ஒரு காரைப் பார்க்கும்போது, அது உண்மையில் இருப்பதைவிடச் சிறியதாகத் தோன்றும். மனித மூளையைப் பொறுத்தவரையில், “சிறியது என்றால் அது தொலைவில் உள்ளது” என்று புரிந்துகொள்ளும். அதனால், கண்ணாடியில் தோன்றும் வாகனங்கள் உண்மையில் இருப்பதைவிட நெருக்கமாகவே இருக்கும். உங்கள் பார்வைக்கு தொலைவில் இருப்பது போல் தோன்றினாலும் உண்மையில் அவை மிகவும் அருகில் இருக்கக்கூடும்.

அதனால்தான் இந்த எச்சரிக்கை அவசியமாக எழுதப்பட்டுள்ளது. பார்வைப் பரப்பை அதிகப்படுத்தும் குவிந்த கண்ணாடி தனது வேலையைச் செய்துகொண்டிருந்தாலும், அது தூரத்தை இயல்பாகவே சற்று மாற்றியமைத்துக் காட்டுகிறது. இந்தச் சிறிய மாற்றமே ஓட்டுநர் கவனமாகக் கருத்தில்கொள்ள வேண்டிய முக்கிய அம்சமாகிறது.

உதாரணமாக, நீங்கள் பாதையை மாற்றப் போகும் நேரத்தில், ORVM-ல் ஒரு கார் கண்ணில் பட்டதாக நினைத்துக்கொள்ளுங்கள். கண்ணாடியில் அது தொலைவில் இருப்பது போலத் தெரிந்தாலும், உண்மையில் அது உங்கள் பக்கத்தில் உள்ள பாதைக்கு மிக நெருக்கமாக இருக்கலாம். இந்தத் தவறான மதிப்பீடுதான் விபத்துக்குக் காரணமாகலாம். எனவே, ORVM-ஐ மட்டும் நம்பி திடீர் முடிவுகளை எடுக்க வேண்டாம் என நினைவூட்டுவதற்காகவே இந்த எச்சரிக்கை குறிப்பு அதில் எழுதப்பட்டுள்ளது.

“கண்ணாடியில் உள்ள பொருட்கள் தோன்றுவதைவிட நெருக்கமாக உள்ளன” என்பது வெறும் ஒரு சட்டப்பூர்வ வரி மட்டுமல்ல, அது ஒரு உயிர் காக்கும் எச்சரிக்கை ஆகும். பக்கவாட்டு கண்ணாடி உங்களுக்கு விரிவான பார்வையை அளிக்கிறது. ஆனால், நீங்கள் பார்க்கும் தூரம் முழுமையாகச் சரியானது அல்ல. அதனால் பாதை மாற்றம் அல்லது ஓவர் டேக் செய்யும் முன்பு, எப்போதும் ORVM மற்றும் IRVM (உள்ளே இருக்கும் பின்புறக் காட்சி கண்ணாடி) மற்றும் ஒரு பக்கமாகத் திரும்பிப் பார்ப்பது (shoulder check) ஆகிய மூன்றையும் பயன்படுத்துவது மிகச்சிறந்த பாதுகாப்பு நடைமுறையாகும்.

 

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

Translate »
upgrade to vip (no plugin) →.