தமிழ்நாடு
தமிழகத்தில் முழு முடக்கமா?- வதந்தியை நம்ப வேண்டாம் என அரசு அறிவிப்பு

நாளை தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெறும் நிலையில், நாளை மறு நாள் முதல் மாநிலம் முழுவதும் கொரோனா தொற்றுப் பரவலை சமாளிக்க முழு முடக்க உத்தரவு அமலுக்கு வரும் என்று சொல்லப்பட்டு வருகிறது. இப்படியான தகவலை நம்ப வேண்டாம் என்று தமிழக அரசு சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டு இருக்கின்றது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றுப் பரவல் என்பது அதிகரித்து வருகிறது. குறிப்பாக கடந்த மூன்று நாட்களில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு என்பது 3 ஆயிரத்துக்கும் அதிகமாக உள்ளது. இதனால் வரும் நாட்களில் கொரோனா தொற்றுப் பரவல் இன்னும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

அதே நேரத்தில் தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் நாளை ஒரே கட்டமாக தேர்தல நடைபெறுகிறது. முன்னதாக நேற்று மாலையுடன் அனைத்து தொகுதிகளிலும் தேர்தல் பிரச்சாரங்கள் முடிவுக்கு வந்தன.
இந்நிலையில் முழு முடக்கம் குறித்தான வதந்திகள் பற்றி மாநில சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், ‘மக்கள் இப்படியான தகவல்களை தயவு செய்து நம்ப வேண்டாம். தமிழகத்தில் முழு முடக்க உத்தரவு அமல் செய்யப்படாது. தேவையில்லாத நடவடிக்கைகள் குறித்தான செயல்பாடுகளை படிப் படியாக குறைப்பது குறித்து வல்லுநர்களுடன் கலந்தாலோசித்து முடிவெடுக்கப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.

















