சினிமா செய்திகள்
வசூலில் சாதனைப் படைக்கும் பொன்னியின் செல்வன் 2: தியேட்டர்களில் அமோக வரவேற்பு!

அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக எடுத்து சாதனைப் படைத்துள்ளார் இயக்குநர் மணிரத்னம். ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன் மற்றும் ரகுமான் உள்ளிட்ட பல நட்சத்திரங்களின் நடிப்பில் கடந்த வருடம் வெளியான ‘பொன்னியின் செல்வன் – 1’ திரைப்படம், இந்திய சினிமாவின் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. இத்திரைப்படம் ரூ.500 கோடிக்கும் மேலாக வசூலித்து சாதனைப் படைத்தது.
பொன்னியின் செல்வன் 2
பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் கடந்த மாதம் ஏப்ரல் 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது. முதல் பாகத்தின் வெற்றியைப் போலவே, இரண்டாம் பாகத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியான இந்தப் படத்தை ரசிகர்கள் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக கொண்டாடி வருகிறார்கள்.
இந்நிலையில் ‘பொன்னியின் செல்வன் – 2’ திரைப்படம் உலக அளவில் பாக்ஸ் ஆபீசில் ரூ.300 கோடி வசூலை வாரி குவித்துள்ளது. இதனை பொன்னியின் செல்வன் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இனிவரும் நாட்களிலும் படம் நன்றாக ஓடும் என்பதால், வசூல் ரூபாய் 500 கோடியைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தியேட்டர்களில் பொன்னியின் செல்வன் படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. பாகம் ஒன்றில் இருந்த பரபரப்பும், சுவாரஸ்யமும் பாகம் இரண்டிலும் உள்ளதால், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.