தமிழ்நாடு
ஸ்டெர்லைட் குறித்த ஆளுநரின் கருத்துக்கு பதில் சொல்ல விரும்பாத ஓபிஎஸ்!

ஸ்டெர்லைட் ஆலையை வெளிநாட்டு நிதியுதவியுடன் மக்களைத் தூண்டிவிட்டு மூடிவிட்டனர் என ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ள கருத்து தமிழக அரசியலில் புயலை வீசியுள்ளது. பல அரசியல் தலைவர்கள் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இதற்கு பதில் சொல்ல விரும்பவில்லை என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது வருந்தத்தக்கது. ஆனால் நாட்டின் மொத்த தாமிர உற்பத்தியில் 40 சதவீதத்தை பூர்த்தி செய்து வந்த ஸ்டெர்லைட் ஆலையை வெளிநாட்டு நிதி மூலம் மக்களை தூண்டிவிட்டு மூடிவிட்டனர் என ஆளுநர் பேசியது குறித்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதில் அளித்த ஓபிஎஸ், பதில் சொல்ல விரும்பவில்லை என தெரிவித்தார். முன்னதாக அதிமுக எம்எல்ஏ கே.பி.முனுசாமி செய்தியாளர் சந்திப்பில் ஆளுநரின் கருத்து சற்று வேதனை அளிக்கிறது எனவும், உயர்ந்த பதவியில் இருக்கும் தலைவர்கள் இப்படி பேசுவது அழகல்ல என்றும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.


















