தமிழ்நாடு
ஆளுநராக இருந்தாலும் ஆண்டவராக இருந்தாலும் தண்டனை அனுபவித்துத்தான் ஆக வேண்டும்: அமைச்சர் துரைமுருகன்!

தமிழக சட்டசபையில் நேற்று ஆளுநரின் நிதி தொடர்பாக பேசிய வேல்முருகன் எம்எல்ஏவின் கேள்விக்கு பதில் அளித்த நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அட்சய பாத்திரம் திட்டம் குறித்து பேசினார். அப்போது குறுக்கிட்ட அமைச்சர் துரைமுருகன் ஆளுநராக இருந்தாலும் ஆண்டவராக இருந்தாலும் தப்பு செய்தால் தண்டனை அனுபவித்துத்தான் ஆக வேண்டும் என தெரிவித்தார்.

#image_title
சட்டமன்றத்தில் இயற்றப்படும் மசோதாக்களை ஆளுநர் நிலுவையில் வைத்திருப்பதால் அவருக்காக வழங்கும் தொகையை நிறுத்தி வைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார் வேல்முருகன். இதற்கு பதில் அளித்த நிதி அமைச்சர் பிடிஆர், கடந்த ஆட்சியில் ஆளுநரின் செயலாளர் எந்த காரணமும் இல்லாமல் 5 கோடி ரூபாய் செலவுக்கு வழங்கும்படி நிதி கேட்டு அரசுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.
ஜனவரி முதல் மார்ச் வரை 3 மாத செலவுக்கு 2 கோடி ரூபாய் கேட்டிருக்கின்றனர். அமைச்சர் கையெழுத்து இல்லாமல் நிதித்துறை செயலாளரே தன்னிச்சையாக முடிவெடுத்து அந்த தொகையை வழங்கியுள்ளார். மேலும் 1,56,000 ரூபாய் 50 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதற்கு அடுத்த ஆண்டு 5 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. அந்த தொகை அட்சயபாத்திர திட்டத்திற்கு என்று கூறி ஆளுநரின் வீட்டு கணக்குக்கு நிதி சென்றிருக்கிறது.
2021-ஆம் ஆண்டு புதிய ஆளுநர் வந்த பிறகு 17 கோப்புகளின் அடிப்படையில் நமது அரசு நிதி வழங்கியுள்ளது. சுதந்திர தின விழாவுக்கு 25 லட்சம், சுற்றுப் பயணத்துக்கு 15 லட்சம், அமைச்சர்கள் பதவியேற்பு நிகழ்ச்சிக்கு 10 லட்சம், கிறிஸ்துமஸ் விழாவுக்கு 25 லட்சம், குடியரசு தின விழாவுக்கு 20 லட்சம் என நிதி வழங்கப்பட்டுள்ளது.
எந்த துறைக்கும் ஒதுக்கப்பட்ட நிதியை ஓராண்டுக்குள் செலவு செய்யாவிட்டால் அடுத்த ஆண்டு அந்த தொகையை கேட்கக்கூடாது என சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி, ஆளுநர் 3 கோடி ரூபாய் தான் செலவு செய்துள்ளார். எனவே, இனி 5 கோடி ரூபாய் வழங்கப்படாது எனத் தெரிவித்தார் அமைச்சர்.
அப்போது முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அட்சய பாத்திரம் காலை உணவு திட்டத்தை அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார் என்றுதான் அன்றைக்கு நான் கூறினேன் என தெரிவித்தார். இதற்கு பதில் அளித்த அமைச்சர் துரைமுருகன், அட்சய பாத்திரம் திட்டத்தை நிதியமைச்சர் குறை சொல்லவில்லை. ஆளுநராக இருந்தாலும் ஆண்டவராக இருந்தாலும் தப்பு செய்தால் தண்டனை அனுபவித்துத்தான் ஆக வேண்டும். அல்லது தவறு நடக்கவில்லை என்பதை நிரூபிக்க வேண்டும் என்றார்.