உலகம்
3 ஆம் உலகப் போரைத் தடுக்க என்னால் மட்டுமே முடியும்: டொனால்டு டிரம்ப் அதிரடிப் பேச்சு!

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் கடந்த ஓராண்டை கடந்தும் இன்னமும் நடைபெற்று வருகிறது. இந்தப் போரில் உக்ரைனுக்கு ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்கா ஆயுத உதவி வழங்கி வருகிறது. இதன் காரணமாக போர் இன்னமும் முடிவுக்கு வராமல் நீடித்து வருகிறது. இந்த நிலையில், அமெரிக்காவின் முன்னாள் அதிபரான டொனால்டு டிரம்ப் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட இருக்கிறார். இதற்காக பல இடங்களில் அவர் அரசியல் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.
டொனால்டு டிரம்ப்
அமெரிக்காவில் உள்ள லொவா நகரில் நடந்த கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற டொனால்டு டிரம்ப் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசுகையில், அதிபர் ஜோ பைடன் ரஷ்யாவை, சீன நாட்டின் ஆயுதங்கள் பக்கம் கொண்டு சென்று விட்டார். இந்த உலகினை முடிவுக்கு கொண்டு வரும் அணு ஆயுதப் போருக்கு, ஜோ பைடன் நிர்வாகம் நாட்டை கொண்டு சென்று விட்டது.
3 ஆம் உலகப் போர்
ஜோ பைடன் தலைமையிலான அரசால் நாம் 3 ஆம் உலகப் போரை சந்திக்க அதிக வாய்ப்புள்ளது. ஏனெனில் அவர்கள் யாரும் சரியாக பேசுவதில்லை. தன்மையாக செயல்பட வேண்டிய சூழலில் பைடன் நிர்வாகம் மிகவும் கடுமையாக செயல்படுகிறது. மிக கடுமையாக செயல்பட வேண்டிய சூழலில் தன்மையாக செயல்படுகிறது. உண்மையை சரியாக கூற வேண்டுமென்றால், அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று அவர்களுக்கே தெரியவில்லை. இது 3 ஆம் உலகப் போரில் முடியலாம்.
2024 ஆம் ஆண்டுக்குள் உக்ரைன் – ரஷ்யா போர் முடிவுக்கு வரவில்லை எனில், நான் அமெரிக்காவின் அடுத்த அதிபராக பதவியேற்ற உடனே, பேரழிவுகளை ஏற்படுத்திய ரஷ்யா – உக்ரைன் போரை நிச்சயமாக நிறுத்துவேன். 3 ஆம் உலகப்போரை என்னால் மட்டுமே தடுக்க முடியும். ஏனெனில் எனக்கும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கும் இடையில் நல்ல நட்புறவு உள்ளது. நான் போரை நிறுத்தச் சொல்லி வேண்டுகோள் விடுத்தால் கண்டிப்பாக புதின் கேட்பார் என்று டொனால்ட் ட்ரம்ப் கூறினார்.