உலகம்
197 மில்லியன் மதிப்பு கிரிப்டோகரன்ஸி திருட்டு.. ஹேக்கர்களால் அதிர்ச்சி சம்பவம்..!

சைபர் குற்றவாளிகளான ஹேக்கர்களின் கைவரிசையால் முன்னணி நிறுவனம் ஒன்றில் 197 மில்லியன் டாலர் மதிப்புள்ள கிரிப்டோகரன்சி திருடப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பிளாக் செயின் கண்காணிப்பு நிறுவனமான PeckShield, Ethereum என்ற நிறுவனத்திலிருந்து தான் 197 மில்லியன் மதிப்புள்ள கிரிப்டோ கரன்சிகள் ஆன்லைன் மூலமாக திருடப்பட்ட தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவலை இந்நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து அந்நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்தில் ‘இது தீங்கிழைக்கும் ஹேக்கர்களின் தாக்குதல் என்றும் எங்கள் குழு தற்போது பாதுகாப்பு வல்லுநர்கள் மற்றும் சட்ட வல்லுநர்களுடன் இணைந்து திருடப்பட்ட கிரிப்டோ கரன்சி கரன்சியை மீட்க போராடி வருவதாகவும் எங்களுக்கு இது குறித்த கூடுதல் தகவல் கிடைத்தவுடன் அதை வெளியிடுவோம் என்று தெரிவித்துள்ளது.
இந்த தகவல் வெளியானதில் இருந்து பல கிரிப்டோ கரன்சி முதலீட்டாளர்கள் சமூக வலைதளங்களில் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். மில்லியன் கணக்கான மதிப்புள்ள கிரிப்டோ கரன்சியை ஹேக்கர்கள் திருடும் அளவுக்கு பாதுகாப்பு இன்றி வைத்திருந்தது இந்நிறுவனத்தின் தவறுதான் என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
நான் முதலீடு செய்த 1.3 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள கிரிப்டோகரன்சி திருட்டு போய்விட்டன என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றும், மிகவும் பாதுகாப்பாக இருக்கும் என்றுதான் நினைத்தேன் என்றும் இதை நான் எதிர்பார்க்கவே இல்லை என்றும் பயனாளி ஒருவர் அறிவித்துள்ளார். இப்படி ஒரு சம்பவம் நடக்கும் என்று நான் கற்பனையில் கூட நினைக்கவில்லை என்று இன்னொரு முதலீட்டாளர் பதிவு செய்துள்ளார்.
இந்த நிலையில் இதே நிறுவனத்தில் ஏற்கனவே கடந்த ஆண்டு அக்டோபர் மாதமும் கிரிப்டோகரன்சி திருடப்பட்டதாக கூறப்பட்டது. ஒருமுறை திருட்டு நடந்தும் மறுமுறையும் திருட்டு நடக்கும் அளவுக்கு பாதுகாப்பு இன்றி கிரிப்டோ கரன்சிகளை வைத்திருந்தது நிறுவனத்தின் நிர்வாக கோளாறு தான் என்று பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
ஆன்லைன் மூலம் திருடிய ஹேக்கர்கள் அதை இந்நேரம் பணமாக்கி இருப்பார்கள் என்றும் கிரிப்டோ கரன்சியை திருட்டை பொருத்தவரை அதை கண்டுபிடிப்பது மிகவும் கடினம் என்றும் அப்படியே கண்டுபிடித்தாலும் அதை மீட்பது என்பது கடினமான ஒன்று என்றும் கூறப்பட்டு வருகிறது.
ஏற்கனவே கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தவர்கள் கிரிப்டோ கரன்சியின் மதிப்பு குறைந்து வருவதை அடுத்து தங்கள் முதலீட்டில் நஷ்டம் ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது கிரிப்டோ கரன்சி திருட்டு போய்விட்டது என்பது அவர்களுக்கு மேலும் ஒரு இடியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கிரிப்டோகரன்சி வர்த்தகர்கள் அதனை பாதுகாப்பாக வைத்திருக்காவிட்டால் எதிர்காலத்தில் கிரிப்டோகரன்சியின் வர்த்தகமே முடங்கி போகும் வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.