உலகம்
அணு ஆயுதங்களால் தாக்கிக் கொள்ளும் மூன்றாம் உலகப் போர்… டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை!

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், ஆபாச நடிகை ஸ்டோமி டேனியல்ஸ் உடன் இருந்த உறவை மறைக்க 2016-ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சார நிதியில் இருந்து ஒரு பெரும் தொகையை வழங்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கில் டொனால்ட் டிரம்ப் தற்போது கைதாகியது அங்கு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அணு ஆயுதங்களால் தாக்கிக் கொள்ளும் மூன்றாம் உலகப் போர் வர வாய்ப்புள்ளதாக கூறி மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் டிரம்ப்.

டொனால்ட் டிரம்ப் மீது பல பெண்கள் வீடியோ ஆதாரங்களுடன் பாலியல் புகார் தெரிவித்துள்ளனர். மேலும் ஆபாச நடிகை ஸ்டோமி டேனியல்ஸ் தான் வெளியிட்ட புத்தகத்தில் டிரம்ப் உடனான உறவு குறித்து எழுதி பரபரப்பை ஏற்படுத்தினார். இது 2016-ஆம் ஆண்டு தேர்தலில் எதிரொலித்ததால் டிரம்ப் அதனை மூடி மறைக்க பெரும் தொகையை அந்த நடிகைக்கு வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் 34 பொய்யான வணிக பதிவுகள் வைத்திருந்ததாகவும் டிரம்ப் மீது குற்றச்சாட்டு உண்டு.
இந்த வழக்கில் டிரம்பிற்கு ஆதரவாக வாதாடிய வழக்கறிஞர் திடீரென அவருக்கு எதிராக சாட்சியளித்ததை தொடர்ந்து டிரம்ப் பணம் வழங்கியதற்கான ஆதாரங்களை அதிகாரிகள் கைப்பற்றினர். இந்நிலையில் மான்ஹட்டன் நீதிமன்றத்தில் சரணடைந்த டொனால்ட் டிரம்ப் முறைப்படி கைது செய்யப்பட்டுள்ளார். முன்னால் அதிபர் என்பதால் அவருக்கு கை விலங்குகள் போடப்படவில்லை. குற்றவாளிகளுக்கு செய்யப்படும் கைவிரல் அடையாளங்கள் பதிவு செய்தல் மேற்கொள்ளப்பட்டது.
இதனையடுத்து தனது ஆதரவாளர்களிடம் பேசிய டொனால்ட் டிரம்ப், இதை நான் எதிர்பார்க்கவில்லை. நான் நிரபராதி. நாட்டை அழிக்க நினைத்தவர்களிடம் இருந்து பயப்படாமல் நாட்டை காப்பாற்ற நினைத்தது தான் நான் செய்த குற்றம். நான் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதை தடுக்கவே இந்த வழக்கு விசாரணைகள். தற்போது மிகவும் உறுதியாக இருக்கிறேன்.
ஜோ பைடனின் ஆட்சியில், அணு ஆயுதங்களால் தாக்கிக் கொள்ளும் மூன்றாம் உலகப் போர் ஏற்பட வாய்ப்புள்ளது. சீனா, ஈரான், ரஷ்யா, சவுதி அரேபியா மற்றும் வடகொரியா நாடுகள் இணைந்துள்ளன. இது அழிவுக்கான கூட்டணியாகும். ஜோ பைடன் ஆட்சியில் அமெரிக்கா நரகமாகி வருகிறது என்றார்.