தமிழ்நாடு
வீட்டு உபயோக சிலிண்டர் விலை உயர்வு: ரூ.1000க்கும் அதிகமானதால் அதிர்ச்சி

கடந்த சில மாதங்களாக பெட்ரோல் டீசல் மற்றும் வர்த்தக சிலிண்டர் விலை உயர்ந்து வருகிறது என்பதும் அதுமட்டுமின்றி வீட்டு உபயோக பொருட்கள் மளிகைப் பொருள்கள் அனைத்தும் விலை உயர்ந்து வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.
இந்த நிலையில் வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலை ஏற்கனவே ஆயிரத்தை கிட்டத்தட்ட தொட்டு உள்ள நிலையில் தற்போது ஆயிரத்தை தாண்டியுள்ளது.
சற்றுமுன் எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன்படி சென்னையில் வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலை இதுவரை 965 என விற்பனையாகி வந்த நிலையில் தற்போது 50 ரூபாய் உயர்த்தப்பட்டு உள்ளதால் 1015 ரூபாய் என்ற விலையில் விற்பனை ஆகி வருகிறது .
ஏற்கனவே சிலிண்டர் டெலிவரி செய்பவருக்கு தனியாக பணம் கொடுக்க வேண்டுமென்பதால் 1,050 ரூபாய் வரை பொதுமக்கள் ஒரு சிலிண்டருக்கு செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது .
பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்ந்து கொண்டே இருப்பது ஏழை எளிய நடுத்தர மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.