இந்தியா
தேர்தல் முடிந்தவுடன் வேலையை காட்டிய மத்திய அரசு. சென்னையில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை உயர்வு..!

நாகலாந்து, திரிபுரா மற்றும் மேகாலயா ஆகிய மூன்று மாநில தேர்தல் காரணமாக கடந்த சில மாதங்களாக வீட்டு உபயோக சிலிண்டரின் விலை உயராமல் இருந்த நிலையில் சமீபத்தில் இந்த மாநிலங்களுக்கு தேர்தல் முடிவடைந்து இன்னும் வாக்குகள் கூட எண்ணப்படாத நிலையில் தற்போது சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
———-சென்னையில் சிலிண்டரின் விலை 1068 ரூபாய் என்று விற்பனையாகி வரும் நிலையில் இந்த விலையே மிக அதிகம் என பொதுமக்கள் கருத்து தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் சென்னையில் வீட்டு உபயோகத்திற்காக பயன்படும் சிலிண்டரின் விலை ரூபாய் 50 உயர்த்தப்பட்டுள்ளது. இதனை அடுத்து ரூபாய் 1118.50 என இன்று முதல் சிலிண்டர் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் பெட்ரோல் டீசல் விலை கடந்த 10 மாதங்களாக உயராமல் இருந்தாலும் அவ்வப்போது சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு மாதமும் ஒன்றாம் தேதி சிலிண்டர் விலை குறித்து அறிவிப்பு வெளியாகும் நிலையில் சட்டசபை தேர்தலை ஒட்டி வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டரின் விலை கடந்த சில மாதங்களாக உயர்த்தப்படாமல் இருந்தது.
இந்த நிலையில் 3 மாநில தேர்தல் முடிந்த நிலையில் எரிவாயு சிலிண்டர் ரூபாய் 50 உயர்த்தப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீட்டு உபயோக சிலிண்டர் மட்டுமின்றி வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை ரூ.223 உயர்ந்து ரூபாய் 2268 என இன்று முதல் விற்பனை செய்யப்படும் என அறிவித்துள்ளது. இதனால் ஹோட்டல் மற்றும் டீக்கடைகளில் விலைவாசி உயரும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.