வணிகம்
ஓய்வூதியதாரர்களுக்கு பண்டிகை முன்பணம் மற்றும் பொங்கல் பரிசுத் தொகை உயர்வு – தமிழக அரசு அரசாணை வெளியீடு!

சென்னை:
தமிழக அரசின் ஓய்வூதியதாரர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்த பண்டிகை கால முன்பணமும், பொங்கல் பரிசுத் தொகையும் உயர்த்தப்பட்டதற்கான அரசாணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி, சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் முதல்வர் அறிவித்தபோது, “ஓய்வூதியதாரர்கள் பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாட, வழங்கப்பட்டு வந்த ₹4,000 பண்டிகை முன்பணம் இனிமேல் ₹6,000 ஆக உயர்த்தப்படும்” என தெரிவித்திருந்தார். இந்த உயர்வால் 52,000 ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள் என்றும், அரசுக்கு ₹10 கோடி கூடுதல் செலவு ஏற்படும் என்றும் கூறியிருந்தார்.
அதேபோல், “C மற்றும் D பிரிவு ஓய்வூதியதாரர்கள், அனைத்து வகை தனி ஓய்வூதியதாரர்கள், மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள்” ஆகியோருக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் பொங்கல் பரிசுத் தொகையும் ₹500-இல் இருந்து ₹1,000 ஆக உயர்த்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதனால் 4.71 லட்சம் பேர் பயன்பெற, ₹24 கோடி அரசு செலவழிக்க வேண்டியிருக்கும்.
இப்போது, இதற்கான அரசாணை (G.O.) வெளியிடப்பட்டுள்ளது. புதிய உயர்வு அரசாணை வெளியிடப்பட்ட நாளிலிருந்து நடைமுறைக்கு வரும். பண்டிகை கால முன்பணம், 10 மாத தவணைகளில் பிடித்தம் செய்யப்படும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.






