தமிழ்நாடு
திமுகவை சமாளிக்க எடப்பாடியின் அதிரடி பிளான்: சட்டமன்றத்தை கூட்ட உற்சாகம்!

தமிழக சட்டமன்ற சபாநாயகருக்கு எதிராக திமுக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர கடிதம் கொடுத்துள்ள நிலையில், சட்டமன்றத்தை ஒரு மாதம் காலம் நடத்துவது தொடர்பாக அதிரடியான ஒரு முடிவை எடுத்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
வழக்கமாக ஜூன் மாதம் கூடும் சட்டமன்றம் இதுவரை கூடவில்லை. இதற்கான அறிவிப்பு கூட இதுவரை வெளியாகவில்லை. இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்ட எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் உடனடியாக சட்டமன்றத்தைக் கூட்ட வேண்டுமென முதல்வருக்கு வலியுறுத்தினார். ஏற்கனவே சபாநாயகர் தனபால் மீது திமுக சார்பாக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரக் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் அதிமுக ஆட்சியைக் கவிழ்ப்பது தொடர்பாக திமுக தரப்பிலிருந்து அதிமுக எம்எல்ஏக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திவருவதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. இதனால் சட்டமன்றம் கூடினால் சபாநாயகர் மீது மட்டுமல்லாமல் அதிமுக ஆட்சி மீது கூட திமுக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரலாம் என கூறப்படுகிறது.
இந்த கடினமான சூழலில் சட்டமன்ற கூட்டத்தொடரை ஒரு மாத காலம் தொடர்ந்து நடத்தலாம் என திட்டமிட்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. இவரின் இந்த உற்சாகத்துக்கு பின்னணியில் இருப்பது மாநிலங்களவை தேர்தல் என கூறப்படுகிறது.
எடப்பாடி பழனிசாமியின் கணக்குப்படி திமுகவினர் பிரச்சினை ஏதும் செய்யமாட்டார்கள். அவர்களுக்கு சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை விட விரைவில் வரவுள்ள மாநிலங்களவைத் தேர்தல் முக்கியம். அதில் திமுகவுக்கு மூன்று எம்பிக்கள் கிடைப்பது உறுதி. தற்போது திமுக அவசரப்பட்டு ஆட்சியை கவிழ்த்தால் 3 எம்பிகளை பெறும் வாய்ப்பை திமுக இழக்கும். அப்படியும் திமுக அமளியில் ஈடுபட்டால் ஒரு சிலரை சஸ்பெண்ட் செய்து மாநிலங்களவைத் தேர்தலில் வாக்களிக்க முடியாதபடி செய்யலாம் என பெரிய திட்டம் தீட்டியிருக்கிறார் எடப்பாடி என கோட்டை வட்டாரத்தில் பேசப்படுகிறது.



















