இந்தியா
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் “வெங்கடாத்ரி“ செயலி தொடக்கம்

திருப்பதி திருமலைக்கு வரும் பக்தர்கள் திருமலையில் வழி கண்டறியவும் அத்தியாவசிய வசதிகளை அடையாளம் காணவும் உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள “வெங்கடாத்ரி“ செயலியில் 24 மணி நேரமும் வழிகாட்டுதலை வழங்கும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த குரல் வழி உதவியாளர் வசதியுடன் கூடியதாக உருவாக்கப்பட்டுள்ளது.
குடிநீர் மையங்கள் மற்றும் தரிசன நுழைவு வாயில்கள் போன்ற வசதிகளைக் கண்டறிய பக்தர்கள் குரல் கட்டளைகளைப் பயன்படுத்தலாம். இணைய வசதி குறைவாக உள்ள பகுதிகளில் ஆஃப் லைனிலும் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
வெங்கடாத்ரி செயலி 25 வகையான வசதிப் பிரிவுகளின் கீழ் 350க்கும் மேற்பட்ட இடங்களை வரைபடத்தில் காட்டுகிறது. இதில் குடிநீர் மையங்கள், மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ மையங்கள், வாகன நிறுத்துமிடங்கள். பொதுக் கழிப்பறைகள், பேருந்து நிறுத்தங்கள், தரிசன நுழைவு வாயில்கள், உடைமை வைப்பகங்கள், இலவச காலணி பாதுகாப்பு மையங்கள், பக்தர்களுக்கான உதவி மையங்கள், தேவஸ்தான அலுவலகங்கள் மற்றும் விசாரணை மையங்கள்., கல்யாண கட்டாக்கள், காவல் நிலையங்கள், கண்காணிப்புத் துறை அலுவலகங்கள், கோயில்வளாகம் மற்றும் வணிக வளாகங்கள், அன்னப்பிரசாத வளாகம் போன்றவையும் அடங்கும்.
அவசரகாலத் தொடர்புகள், காவல்தறை மற்றும் தேவஸ்தான உதவி மையங்களை ஒரே தொடுதலில் தொடர்பு கொள்ள முடியும். மேலும் இது பேருந்து வழித்தடங்கள் மற்றம் நேரங்களையும் காட்டுகிறது. எனது இடத்தைக் குறித்துக் கொள்ளுதல் என்ற அம்சம் பக்தர்கள் தங்கள் வாகன நிறுத்துமிடம் அல்லது பிற முக்கிய இடங்களை சேமித்து வைத்து மீண்டும் அந்த இடத்திற்குச் செல்ல உதவுகிறது.
தெலுங்கு, தமிழ், கன்னடம், இந்தி, ஆங்கிலம் ஆகிய 5 மொழிகளில் ஆப்பிள் ஆப் ஸ்டோர் மற்றும் கூகுள் பிளே ஸ்டோரிலும் கிடைக்கும்.
நேற்று இந்த செயலியை முதல்வர் சந்திரபாபு நாயுடு காணொலி மூலம் தொடங்கி வைத்தார்.


